காரில் சென்ற வக்கீல் ஒருவரை, ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றதாக கூறி அவர்மீது பொய் வழக்கு போட்ட உத்தமபாளையம் காவல் ஆய்வாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் தற்போது ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சிலைமணி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞர் சிவன் ராஜ் என்பவரை வழிமறித்து, இருசக்கர வாகனத்தில் தலைகவசம் இன்றி சென்றதாக பொய்யாக வழக்குப் பதிவு செய்துள்ளார்.
அதோடு சிவன் ராஜூடன் காரில் பயணம் செய்த முகம்மது யாசிர் என்பவரையும் மூர்க்கத்தனமாக காவலர் தாக்கினார் என சொல்லப்படுகிறது. மேலும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் அவதூறாக பேசியுள்ளார் என வழக்கறிஞர் சிவன் ராஜ் தரப்பில் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக வழக்கறிஞர் சிவன் ராஜ், மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
]
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், காவல் ஆய்வாளர் சிலைமணி செய்த மனித உரிமை மீறல் மற்றும் சட்ட விதிமுறை மீறல் உறுதியானதால் உத்தமபாளையம் காவல் ஆய்வாளராக தற்போது பணிபுரிந்து வரும் சிலை மணிக்கு ரூ.1 லட்சம் அபாராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு காவல்துறை வட்டாரத்தில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM