குலசேகரம்: குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்1 மற்றும் சிற்றார்2 ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது 41.47 அடியாக உள்ள நிலையில் தற்போது அணைக்கு நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக தண்ணீர் வெளியேற்றம் 500 கன அடியாகவே உள்ளது. இந்த தண்ணீர் கோதையாற்றின் வழியாக பாய்ந்து செல்கிறது. ஏற்கனவே கனமழை காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரும் கலந்துவிடுவதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஏற்கனவே திற்பரப்பு அருவியில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 6வது நாளாக இன்றும் தடை தொடர்கிறது. இதேபோல் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று 72 அடியை கடந்துள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி 1000 கன அடி தண்ணீர் மறுகால் வழியாக திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் பரளியாற்றில் பாய்ந்து செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பகுதியான மாத்தூர் தொட்டிப்பாலம், அருவிக்கரை ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மழை அளவு விபரம் (மி.மீ)
நாகர்கோவில் – 3.8
கன்னிமார் – 18.8
குளச்சல் – 18.4
இரணியல் – 12.4
பாலமோர் – 9.6
முள்ளங்கினாவிளை – 8.4
கோழிப்போர்விளை – 2.4
கொட்டாரம் – 2.2
பேச்சிப்பாறை – 1
மாம்பழத்துறையாறு – 1
ஆனை கிடங்கு – 1