புதுடில்லி, ‘தி வயர்’ செய்தி இணையதள ஆசிரியர்களின் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்திய விதம் அதிகப்படியானது என்றும், அதில் முறையான விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும், ‘எடிட்டர்ஸ் கில்டு’ கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடில்லியைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகர் அமித் மால்வியா குறித்து, ‘தி வயர்’ செய்தி இணையதளத்தில் வெளியான கட்டுரை குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இணையதளத்தின் மீது அவதுாறு வழக்கும் பதிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து, ‘தி வயர்’ அலுவலகம் மற்றும் அதன் ஆசிரியர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
இது குறித்து, ‘எடிட்டர்ஸ் கில்டு’ வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த சோதனையின் போது, ‘மொபைல் போன்’கள், கணினிகள், ‘ஐ பாட்’கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக, ‘தி வயர்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்களை மதிப்பிட்டு எழுதித்தர கோரியதை போலீசார் நிராகரித்துள்ளனர்.
இது, விசாரணை விதிகளுக்கு எதிரானது. மேலும் பத்திரிகையாளர்களின் கணினி உள்ளிட்டவற்றில் செய்தி தொடர்பான பல்வேறு ரகசிய தகவல்கள் இருக்கும். அதற்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அமித் மால்வியா தொடர்பான செய்தியில் சில தவறுகள் நேர்ந்துள்ளதாக வயர் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. அந்த தவறான தகவல்களும் திரும்ப பெறப்பட்டுவிட்டன.
அப்படி இருந்தும் சோதனையின் போது போலீசார் நடந்துகொண்ட விதம் அதிகப்படியானது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement