புதுடெல்லி: அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல தாதா விகாஸ் துபே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதில் கிடைத்த பணத்தில் அசையா சொத்துகளை வாங்கி உள்ளார்.
கான்பூர், லக்னோவில் விகாஸ் துபே, அவரது குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளுக்கு சொந்தமான ரூ.10.12 கோடி அசையா சொத்துகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கான்பூர் நகர் மாவட்டம், பிக்ரூ கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் துபே. இவர் மீது கொலை உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் தலைமறைவாக இருந்த துபே 2020-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அடுத்த நாள் அங்கிருந்து கான்பூருக்கு அழைத்தவந்தபோது தப்பி ஓட முயன்ற துபேவை நோக்கி போலீஸார் சுட்டதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.