சென்னை: திமுகவை கண்டித்து பாஜக மகளிர் அணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 364 பேர் மீது போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக பேச்சாளரும், நிர்வாகியுமான சைதை சாதிக், தமிழக பாஜகபிரமுகர்களும், தமிழ் திரைப்பட நடிகைகளுமான குஷ்பு, நமீதா, கவுதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரை அவதூறாக பேசியதைக் கண்டித்தும், அவரைக் கைது செய்ய வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், சரஸ்வதி, எம்.ஆர்.காந்தி, மகளிர் அணி மாநில தலைவர் உமாரதி ராஜன், மகளிர் அணி பார்வையாளர் பிரமிளா சம்பத் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் போலீஸார் கைதுசெய்து அப்புறப்படுத்தினர். மாலையில் அவர்களை விடுவித்தனர்.
இந்நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி உட்பட 364 பேர் மீது, சட்டவிரோதமாக கூடுதல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.