தலைநகர் சென்னையில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி இரவு வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டத் தொடங்கியது. முதல் நாளான நவம்பர் ஒன்றாம் தேதி விட்டு விட்டு நல்ல மழையை தந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பணிகள் பெரிதும் கைகொடுத்தன. மழைநீர் தேங்கியபடி வடியாமல் இருந்த இடங்களில் மோட்டார்கள் மூலம் விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிகாரிகள் 24 மணி நேரமும் களப்பணியில் இருந்தனர்.
இரண்டாம் நாளாக நவம்பர் 2ஆம் தேதியும் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. இதனால் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் மழைக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் தப்பித்துக் கொண்டது. இதனை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.
இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று (நவம்பர் 3) மழை குறித்தும், விடுமுறை குறித்தும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முதலே சென்னையில் மழையை காண முடியவில்லை. இன்று காலையும் அதேநிலை தான். சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின்படி, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்சமாக 25-26, குறைந்தபட்சமாக 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலை காணப்படும் எனத் தெரிவித்தது. இதேபோல் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்துவிட்டது. ஹாட்ரிக் விடுமுறை வாய்ப்பில்லை குழந்தைகளே. உங்க ஹோம் ஒர்க்கை முடித்துவிட்டு ரெடியா இருங்க எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சில தனியார் வானிலை ஆய்வாளர்கள், இன்று காலை 6 மணி நிலவரப்படி சென்னை மிகவும் வறட்சியாக தான் காணப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னையில் இன்றைய தினம் மழைக்கு வாய்ப்பில்லை. குளிர்ச்சியான சூழல் நிலவும். பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும். வேலைக்கு செல்பவர்கள் தாராளமாக செல்லலாம்.
என்ன ஒன்று. குடை, மழை கோட் என முன்னெச்சரிக்கை விஷயங்களோடு புறப்பட்டு செல்வது நல்லது. சாலைகள் சேதமடைந்தும், தண்ணீர் தேங்கியும், மின் கம்பங்கள், மின் ஒயர்கள் ஆகியவையும் பழுதாக, சேதமடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு மாணவ, மாணவிகள் வெளியே சென்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பே வந்துவிட்டது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நிலவரத்தை மாவட்ட ஆட்சியர் அமிர்தா ஜோதி ஐஏஎஸ் உறுதி செய்துள்ளார்.