புதுடெல்லி: எதிரி நாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து தகர்க்கும் ஏடி-1 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (டிஆர்டிஓ) பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
எதிரிநாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து தகர்ப்பதற்காக ஏடி-1ரக ஏவுகணையை டிஆர்டிஓ தயாரித்தது. இதில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நவீன கட்டுப்பாட்டு கருவிகள், நேவிகேஷன் கருவிகள் உள்ளன. இந்த ஏவுகணை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் நேற்று சோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை செல்லும் பாதை சென்சார்கள், ரேடார்கள், டெலிமெட்ரி மற்றும்எலக்ட்ரோ ஆப்டிக்கல் கண்காணிப்பு நிலையங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. இலக்கை நோக்கி இந்த ஏவுகணை துல்லியமாக சென்றது.
ஏடி-1 ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதற்காக டிஆர்டிஓவிஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சில நாடுகளில் மட்டும்…
இடைமறித்து தாக்கும் ஏவுகணை தொழில்நுட்பம் உலகளவில் ஒரு சில நாடுகளில் மட்டுமே உள்ளதால், இந்த பரிசோதனை நாட்டின் ஏவுகணை திறனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று, நாட்டின் வலிமையை வலுப்படுத்தும் என்றுஅமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.