தெலங்கானாவில் இன்று இடைத்தேர்தல் ₹4 ஆயிரம் பணம் பத்தாது 10 கிராம் தங்கமும் வேணும்

* பாஜவுக்கு ஓட்டு போட கிராம மக்கள் கறார்

திருமலை : தெலங்கானாவில் இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் 10 கிராம் தங்கம் கொடுத்தால் மட்டுமே பாஜவுக்கு ஓட்டு என்று வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோடு சட்டப்பேரவைக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு 10 கிராம்  தங்கம் தருவதாக பாஜவினர் கூறியுள்ளனர்.

 ஆனால், ₹4 ஆயிரம் மட்டுமே வழங்கியுள்ளார்களாம். இதனால், பாஜ தலைவர்களுக்கு வாக்காளர்கள் கண்டனம் தெரிவித்தனர். முனுகோடு மண்டலம் கொரடிக்கால் கிராம மக்கள்   தங்கம் தராவிட்டால் வாக்களிக்க மாட்டோம் என கூறியுள்ளனர். இதேபோல், ஆளும் டிஆர்எஸ் கட்சி வாக்காளர்களுக்கு ₹3 ஆயிரம் வழங்கியுள்ளனர். முனுகோடு தொகுதியில் அதிகளவில் பொதுமக்கள் பருத்தி வேலைக்கு செல்வது வழக்கம்.

தேர்தல் தேதி அறிவித்தது முதல் அரசியல் கட்சியினரின் கூட்டத்திற்கு  கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பணம் கொடுத்து அழைத்து சென்றதால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இடைத்தேர்தல்  காரணமாக அரசியல் கட்சிகள் கூட்டத்திற்கு சென்றதன் மூலம் ஒருத்தருக்கு ₹30 ஆயிரம் முதல் ₹40 ஆயிரம் வரை கிடைத்ததாக கூலி தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தேர்தல் திருவிழா இன்று  நிறைவு பெறக்கூடிய நிலையில் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை வைத்து பல கோடிக்கு சூதாட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தலில் பாஜவா அல்லது டிஆர்எஸ் கட்சியா என்ற வகையில் ₹100 முதல்  பல லட்சங்களில் சூதாட்டம் நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.