பிகார் (மொகாமா, கோபால் கஞ்ச்), மகாராஷ்டிரா (அந்தேரி கிழக்கு), ஹரியானா (ஆதம்பூர்), தெலங்கானா (முனுகோட்), உத்தரப் பிரதேசம் (கோலா கோக்ரானத்), ஒடிசா (தம்நகர்- SC) ஆகிய மாநிலங்களில் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று (நவம்பர் 3) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் மூன்று மாநிலங்களில் பாஜக ஆளுங்கட்சியாக இருக்கிறது. விரைவில் ஹிமாச்சல் பிரதேசம், குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் அமைந்திருக்கிறது. இவற்றில் பாஜக, காங்கிரஸ், பிராந்திய கட்சிகள் இடையே பலத்த போட்டி உருவாகியுள்ளது.
அந்தேரி (E), மகாராஷ்டிரா
சிவசேனா இரண்டாக பிளவுபட்டதை தொடர்ந்து நடக்கும் முதல் பெரிய தேர்தல் இதுவாகும். பாஜக வேட்பாளர் பின்வாங்கிய நிலையில், ஷிண்டே சிவசேனா, உத்தவ் தாக்கரே சிவசேனா என இருதரப்பில் இருந்தும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இது உண்மையான சிவசேனா யார்? என்பதை உறுதிபடுத்தும் தேர்தலாகவும் இருக்கும். அடுத்து மும்பை மாநகராட்சி தேர்தல் நடைபெறும் நிலையில் அந்தேரி கிழக்கு இடைத்தேர்தல் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மொகாமா & கோபால்கஞ்ச், பிகார்
பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியதை அடுத்து நடக்கும் பெரிய தேர்தல் இதுவாகும். ஐக்கிய ஜனதா தளம் கட்சியானது ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. கிரிமினல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி எம்.எல்.ஏ ஆனந்த் சிங் சிறைக்கு சென்றதால் ஏற்பட்ட காலியிடத்திற்கு தேர்தல் நடக்கிறது. இதில் அவரது மனைவி களமிறக்கி விடப்பட்டுள்ளார். இதனால் கிரிமினல் செயல்பாடுகள் என்ற விஷயத்தை பாஜக கையிலெடுத்து பிரச்சாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
முனுகோட், தெலங்கானா
எம்.எல்.ஏ கோமதிரெட்டி ராஜ்கோபால் ரெட்டி ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததால் இடைத்தேர்தல் நடக்கிறது. முதல்வர் சந்திரசேகர் ராவ் TRS-ஐ தேசிய கட்சியாக மாற்றிய பிறகு நடக்கும் முதல் தேர்தல். 2024 மக்களவை தேர்தலில் மிகப்பெரிய எழுச்சியையும், 2023 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கனவையும் சந்திரசேகர் ராவ் கொண்டிருக்கிறார். இத்தகைய சூழலில் முனுகோட் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.
கோலா கோக்ரானத், உத்தரப் பிரதேசம்
பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் கிரி உயிரிழப்பால் இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தவில்லை. எனவே பாஜக, சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. கிரி மறைவால் ஏற்பட்ட அனுதாப அலையை பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அதேசமயம் சமீபத்தில் காலமான முலாயம் சிங் யாதவின் மறைவில் இருந்து சமாஜ்வாதி கட்சி எழுச்சி காண விரும்புகிறது.
ஆதம்பூர், ஹரியானா
காங்கிரஸ் எம்.எல்.ஏ குல்தீப் பிஷ்னாய் பாஜகவில் சேர்ந்ததால் பல்வேறு அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக தனது பதவியை குல்தீப் ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரது மகள் பவ்யா, பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி வருகையால் இந்த தொகுதியில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
தம்நகர், ஒடிசா
பாஜக எம்.எல்.ஏ பிஷு சரண் சேதி மறைவால் ஏற்பட்ட காலியிடத்தை அடுத்து இடைத்தேர்தல் நடக்கிறது. பாஜக சார்பில் சூர்யபன்ஷி சூரஜ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பிஜு ஜனதா தளம் சார்பில் அபந்தி தாஸ் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் ஹரேகிருஷ்ணா சேதி நிறுத்தப்பட்டிருக்கிறார்.