சென்னை அசோக் நகரில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்குமென அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை செய்வதற்காக துப்புரவு பணியாளர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். குறிப்பிட்ட இரண்டு பள்ளி கட்டிடங்களுக்கு இடையே தேங்கியிருந்த மழை நீரில் தவளைகள் செத்து மிதப்பதை அவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மின்சாரம் தாக்கி தவளைகள் இறந்திருக்கலாம் என அஞ்சி மின்சார துறை ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக பள்ளிக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பள்ளிநிர்வாகம் சார்பில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாணவர்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிகப்படியான மழை பெய்யும் போதெல்லாம் வளாகத்தில் நீர் தேங்கும் எனவும், பள்ளிவளாகம் தாழ்வான பகுதியில் இருப்பதால் 1 மணி நேர மழைக்கே வளாகத்தில் நீர் தேங்கும் நிலை உள்ளது எனவும் கூறப்படுகிறது.
இன்று மின் கசிவின் காரணமாக தேங்கியிருந்த மழை நீரில் மின்சாரம் பாய்ந்ததால் மழை நீரில் உள்ள தவளைகள் செத்து மிதந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக துப்புரவு பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.