சென்னை: விருப்பம் இருந்தால் இந்தி படிக்கலாம். இந்தியை யாரிடமும் திணிக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழகத்தில் வளர்ந்துவரும் அரசியல் தலைவர்களுக்கான அரசியல் தலைமை, வியூகம் மற்றும் தொடர்பு பற்றிய 3 நாள் பயிற்சி பட்டறையின் தொடக்க நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில்நேற்று நடைபெற்றது. இதில் இளைஞர்கள், அரசியல் ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆஸ்தர் நிறுவனம் சார்பில் நடந்த இந்த பயிற்சி பட்டறைக்கு அரசியல் வியூக வகுப்பாளர் ஆஸ்பயர் கே.சுவாமிநாதன் தலைமை வகித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த பத்திரிகையாளர் ‘துக்ளக்’ ரமேஷ் கலந்துகொண்டு அரசியல் தலைமைத்துவம் குறித்து உரையாற்றினர். அப்போது, அண்ணாமலை பேசியதாவது:
உளவியல், வரலாறு, புவியியல்உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் படித்திருந்தாலும்கூட, அரசியல் அறிவியல் படிப்பு என்பது அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஓர் அரசியல்வாதி தனது பணியில் வெற்றி பெறுவதற்கு ஒரு கருவி தேவைப்படுகிறது. அதற்கான முயற்சிதான் இந்த பயிற்சி பட்டறை. ராணுவம், கார்ப்பரேட், சிவில் சர்வீஸ் உள்ளிட்ட ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தலைமைத்துவம் இருக்கிறது. தமிழகத்தில் காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஓமந்தூரார் உள்ளிட்ட நிறைய ஜாம்பவான்கள் இருந்துள்ளனர். இவர்கள் அந்தந்த காலகட்டத்தில் அவர்களுக்கே உரிய தலைமைத்துவத்தில் வெற்றி கண்டுள்ளனர்.
ஆனால், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆகிய 2 அரசியல் தலைவர்களும் அசாதாரணமான சூழ்நிலையில், அரசியலுக்குள் நுழைந்து தங்களை, உருவாக்கி, செதுக்கி, 10 ஆண்டுகாலத்தில் உச்சகட்ட நிலையை அடைந்தவர்கள். ஒரு தலைமையின் மிகப்பெரிய வேலை, மற்றொரு தலைமையை உருவாக்குவதுதான். அரசியலுக்கு ஒருவர் வரும்போது, அது நமக்கு தேவையா என யோசித்து முடிவெடுக்க வேண்டும். சரியாகமுடிவெடுக்காத பல அரசியல்வாதிகள் அரசியலில் தோல்வியைசந்திக்கின்றனர். பல அரசியல்வாதிகள் தங்கள் முகத்தை திரை கொண்டு மறைத்து விடுகின்றனர். வெளிப்படை தன்மையுடன் இருந்தால்தான் அரசியலில் வெற்றி பெறமுடியும்.
புதிய கல்விக் கொள்கை குறித்துகஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையில் இந்தியை கட்டாய மொழியாக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சரவை 3-வது விருப்ப மொழியாகத்தான்இந்தியை கொண்டு வந்தது. பாஜக,யாரிடமும் இந்தியை திணிக்கவில்லை. திணிக்கவும் செய்யாது. இவ்வாறு அவர் பேசினார்.