தொட முடியாத காங்கிரஸ்… வீழ்த்த முடியாத பாஜக… குஜராத் சட்டமன்ற தேர்தலில் சுவாரஸியம்!

குஜராத் மாநில சட்டமன்றத்தின் 182 தொகுதிகளுக்கான தேர்தல் தேதி இன்று நண்பகல் அறிவிக்கப்படுகிறது. இம்மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. முதல்முறை 1995ல் குஜராத்தில் ஆட்சியை பிடித்தது பாஜக. அப்போது 121 இடங்களை கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து 2002 சட்டமன்ற தேர்தலில் நரேந்திர மோடி முதல்வரான போது, பாஜக 127 என புதிய உச்சம் தொட்டது. பின்னர் 2007ல் இரண்டாவது முறை மோடி ஆட்சியில் அமர்ந்த போது 117 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

இது 2012ல் 115ஆக மாறியது. இந்நிலையில் 2017 சட்டமன்ற தேர்தலில் முதல்முறை 99 என இரண்டு இலக்கமாக வெற்றி குறைந்தது. இதற்கு ஆளும் பாஜகவிற்கு எதிராக ஹர்திக் படேல் தலைமையில் படேல் சமூகத்தினர் நடத்திய மிகப்பெரிய போராட்டம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதே ஹர்திக் படேல் தற்போது பாஜக உறுப்பினராக இருப்பது வேறு கதை.

1985ல்
காங்கிரஸ்
தலைவர் மாதவ்சின் சோலங்கி தலைமையில் 149 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அப்போது KHAM எனப்படும் ஷ்த்ரிய, ஹரிஜன், ஆதிவாசி, முஸ்லீம் ஆகிய நான்கு வகை சமூகத்தினரை குறிவைத்து அரசியல் களம் நகர்ந்தது. இதை சரியாக பயன்படுத்திய மாதவ்சின் சோலங்கி வாக்கு வங்கி அரசியலில் வெற்றி பெற்றார்.

அதன்பிறகு படேல் சமூகத்தினரின் எழுச்சி படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக 2002ஆம் ஆண்டிற்கு இந்துத்துவா, முஸ்லீம் எதிர்ப்பு ஆதிக்க மனநிலை விஸ்வரூபம் எடுத்தது. இவை பாஜகவிற்கு பெரிதும் கைகொடுக்கத் தொடங்கியதால் இன்று வரை அசைக்க முடியாத சக்தியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் பாஜக வலுவான அடித்தளம் போட்டு வைத்திருக்கிறது. இந்த சூழலில் 2017ல் சரிந்த எண்ணிக்கையை மீட்டெடுக்கவும், 1985ல் காங்கிரஸ் தொட்ட இமாலய இலக்கை அடையவும் குஜராத் பாஜக வியூகம் வகுத்திருக்கிறது. இதற்காக மிகவும் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் பாஜகவின் வியூகத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஆம் ஆத்மி கட்சி நுழைந்திருக்கிறது. பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றியால் தேசிய கட்சியாக உருவெடுத்துள்ள ஆம் ஆத்மி, குஜராத்தில் வாக்குகளை பிரிக்க தீவிரம் காட்டி வருகிறது. இது விஸ்வரூப வெற்றியை பெற வேண்டும் என்ற பாஜகவின் கனவிற்கு தடைக்கல்லாக மாறியுள்ளது.

மறுபுறம் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குஜராத்தில் எழுச்சி பெற்ற காங்கிரஸ் கட்சியும் அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்க திட்டமிட்டுள்ளது. இவையெல்லாம் பாஜகவிற்கு நெருக்கடியாக மாறியுள்ளதால் 2022 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.