சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில்,“இரண்டு நாள் மழைக்கே சென்னை தத்தளிக்கிறது. முதல்வரின் தொகுதியான கொளத்தூரிலேயே மழை நீர் தேங்கி நிற்கிறது. இதில் தண்ணீர் எல்லாம் வடிந்துவிட்டதாக மார்தட்டிக்கொள்கிறார்கள்” என குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், சென்னை திருவிக நகர் மண்டல மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த பிறகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2015, 2020 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றாத இடங்களே இல்லை. ஆனால், மழை வெள்ள நடவடிக்கைப் பணி முழுமையாக நடைபெறவில்லை எனக் குற்றம்சாட்டும் எடப்பாடி பழனிசாமி இந்த மூன்று, நான்கு நாட்களில் மழை நீர் பாதித்த பகுதிகளில் சென்று பார்த்தாரா?
கடந்த பத்தாண்டு காலம் தமிழ்நாட்டை சீரழித்தார்கள். கமிஷன் – கலெக்ஷன் – கரப்ஷன்… இதை மையப்படுத்தியே கொசஸ்தலை ஆறு பேசின் திட்டத்தை ரூ.3500 கோடிக்கு டெண்டர் விட்டார்கள். ஆனால், அந்தப் பணி தொடரவே இல்லை. தி.மு.க ஆட்சியில் தான் அந்த பணிகளை ஏற்றுக்கொண்டு அந்த பணியில் நாற்பது சதவிகித பணிகளை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.
அதோடு மட்டுமல்ல, நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், நான்காண்டு காலத்தில் 126 கிலோமீட்டர் அளவிற்கு மழை நீர் கால்வாய் அமைத்ததாக குறிப்பிட்டிருக்கிறார். முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு 200 கிலோமீட்டர் நீள டெண்டர்திற்கு சுமார் ரூ.700 கோடி திட்டத்தில் இன்றுவரை 156 கிலோ மீட்டர் நீளமுள்ள மழை நீர் கால்வாய் பணி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதிலிருந்து யார் வாய் சொல் வீரர் என தெரிந்து கொள்ளலாம். சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை தாழ்வான பகுதிகளில் எங்கெல்லாம் மழை நீர் தேங்கி நிற்கிறதோ, அதை அடுத்த முறை மழை வரும் பொழுது மழை நீர் தேங்காத வகையில் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பாரதியாரின் கவிதையை எடப்பாடி நேற்று மேற்கோள் காட்டி இருந்தார். அதனுடைய நிறைவு வரியில் பாரதியார் அச்சமும் பேதமையும், அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டாரடி கிளியே… என பாடி முடித்திருப்பார். கடந்த ஆட்சி காலத்தில் ஒன்றிய அரசுக்கு அடிமை சாசனம் விதித்து, பயந்து பயந்து ஆட்சி நடத்தி, உருப்படியான எந்த திட்டத்தையும் தமிழகத்திற்கு கொண்டுவராமல், ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்ற தாரக மந்திரத்தை கொண்டு செயல்பட்டது கடந்த ஆட்சி.
மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டு, மக்களுக்காகவே செயல்படுகின்ற முதல்வர் ஸ்டாலினை, மக்கள் என்றும் போற்றுவார்கள். பத்தாண்டு மேயராக இருந்த ஸ்டாலின் மாநகரத்துக்கு எதையும் செய்யவில்லை என எடப்பாடி குறிப்பிட்டார். ஆனால், அதற்கு பிறகு பத்தாண்டுகள் எடப்பாடி கட்சி தான் ஆட்சியில் இருந்தது. அதனால் தான் இவ்வளவு குழப்பங்களும். அந்த பத்தாண்டுகள் இவர் முழுமையான திட்ட பணிகளை நிறைவேற்றி இருந்தால், இன்றைக்கு மாநகர மக்களுக்கு எந்த பாதிப்பும் இருந்திருக்காது.
தேர்தல் பரப்புரையில் சிங்கப்பூரை போல சென்னையை மாற்றி இருக்கிறோம். ரூ.1,000 கோடி மதிப்பில் கால்வாய்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். எப்படிப்பட்ட மழை வந்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்காது எனக் கூறியிருந்தார். அவர் சொல்லி முடித்த ஆறு மாத காலத்தில் சென்னை அந்த ஆண்டே தத்தளித்தது. அந்த மக்களை காப்பாற்றியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவர் எத்தனை பேட்டி கொடுத்தாலும், அறிக்கை வெளியிட்டாலும் மக்கள் அதை நம்புவதற்கு தயாராக இல்லை” என்ப் பேசினார்.