திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், கடந்த 2017ஆம் ஆண்டு 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. அதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், சிறைத்துறை கூடுதல் டிஜிபி பதிலளிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்ததாக வடமதுரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ராஜ்குமார் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்னிலையில் தற்போது விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சம்பவம் 2017ல் நடந்தபோது மனுதாரரின் வயது 17க்கு குறைவு தான். ஆனால் அவரை மேஜரானவராக கருதி விசாரித்து, தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இளஞ்சிறார் சட்டப்படி தான் தண்டனை வழங்க முடியும். குற்றத்தில் ஈடுபட்டவரின் மனநிலை மற்றும் உடல் திறன் குறித்து முடிவெடுக்க வேண்டும். பெற்றோர் இல்லாத ஆதரவற்ற சூழலில் தான் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கை இளஞ்சிறார் பாதுகாப்பு சட்டப்படி அன்றி, தவறாகவே அணுகியுள்ளனர். இதில், சட்ட மீறல்கள் நடந்துள்ளன. மேஜரானவராக கருதி விசாரிக்கும் போது, சட்டப்படி விசாரிப்பது சிறார் நீதிக்குழுமத்தின் கடமை. மனநிலை மற்றும் உடல்திறனை ஆராய இளஞ்சிறார் நீதிகுழுமமும், மகளிர் நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளது. 21 வயது ஆகாதவரை காப்பகத்தில் தான் வைக்க முடியும். கல்வி, திறன் மேம்பாடு, மாற்று சிகிச்சை ஆலோசனை ஆகியவை வழங்கப்பட வேண்டும்.
இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா எனத் தெரியவில்லை. இதேநிலையில், மனுதாரரை விடுதலை செய்தால், அது அவருக்கும், சமூகத்திற்கும் பாதுகாப்பானதாக இருக்குமா என உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் அவர் சிறையில் கடும் குற்றவாளிகளுடன் பழகியுள்ளார். இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணாத வரை, அப்பீல் மனுவில் தீர்வு காண்பது என்பது நீதியின் நலனுக்கானது அல்ல” என்று கருத்து தெரிவித்தனர்.
மேலும் இளஞ்சிறார் வழக்குகளில் எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறை மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி தரப்பில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 8க்கு தள்ளி வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM