வாத்தி, பத்து தல மட்டுமா? நவம்பர், டிசம்பர் ரிலீஸுக்குப் போட்டிப் போடும் தமிழ்ப் படங்களின் லிஸ்ட்!

ஆண்டு இறுதி என்றாலே தமிழ் சினிமா பரபரப்பாகிவிடும். எடுத்து முடித்த படங்களை உடனே சென்ஸாருக்கு அனுப்பவும், ரிலீஸ் தேதிகளைக் கவனத்தில் கொள்ளவும் மும்முரமாகிவிடும். குறிப்பாக, கொரோனா காலத்துக்குப் பிறகு, தியேட்டருக்கு வரும் மக்களின் எண்ணிக்கை சற்றே இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால், ஓ.டி.டி-யில் நேரடியாக ரிலீஸ் செய்வதாக பிளான் வைத்திருந்த படங்களும் தற்போது தியேட்டர் ரிலீஸை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. அந்த வகையில் இந்த மாதமும், அடுத்த மாதமும் பல படங்கள் வெளிவரக் காத்திருக்கின்றன.

வருகிற நவம்பர் 4-ம் தேதி (நாளை) சுந்தர்.சி-யின் இயக்கத்தில் ஜெய், ஜீவா, ஶ்ரீகாந்த், யோகிபாபு நடித்த ‘காஃபி வித் காதல்’, அசோக்செல்வன், ரிது வர்மா நடித்த ‘நித்தம் ஒரு வானம்’, ‘கோமாளி’ இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் டுடே’ ஆகியவை வெளியாகின்றன. இவற்றுடன் ‘ஒன் வே’, ‘4554’, ‘கண்டேன் உன்னை தந்தேன் என்னை’ உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாகின்றன.

யசோதா

இதற்கு அடுத்தடுத்த வாரங்களில் ஜெயம் ரவி, பிரியாபவானி ஷங்கர் நடித்த ‘அகிலன்’, சமந்தா நடித்த ‘யசோதா’, விஷாலின் ‘லத்தி’, அஷ்வின் ககுமனுவின் ‘பீட்சா 3’, பரத் நடிப்பில் ‘மிரள்’, ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ ஆகியவை வெளிவரக் காத்திருக்கின்றன.

அவற்றையடுத்து செல்வராகவன் நடித்த ‘பகாசூரன்’, வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, அருண் விஜய்யின் ‘பார்டர்’, அரவிந்த்சாமியின் ‘சதுரங்க வேட்டை 2’, விஜய் சேதுபதியின் ‘இடம் பொருள் ஏவல்’ ஆகியவையும், மலையாளத்தில் பிருத்விராஜ், நயன்தாரா நடித்த ‘கோல்டு’ படமும் வெளிவரலாமெனத் தெரிகிறது. இதில் ‘சதுரங்க வேட்டை 2’-ல் அதன் ஹீரோ இன்னும் டப்பிங் பேசி முடிக்காமல் இருப்பதாகவும், அப்படிப்பட்ட சூழலில் இந்த மாதம் படம் வருவது எப்படிச் சாத்தியம் என்றும் பேச்சு உள்ளது.

பிசாசு 2

நவம்பர் 28-ல் சந்தானத்தின் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’, கலையரசன், ஆனந்தி நடித்த ‘டைட்டானிக் – காதலும் கவுந்துபோகும்’, அரவிந்த்சாமி நடித்த ‘கள்ளபார்ட்’ ஆகியவை ரிலீஸாகின்றன. மிஷ்கினின் ‘பிசாசு 2’ நவம்பர் 30-ம் தேதி வெளியாகலாம் என்றும் தெரிகிறது. ஆனால், இது தொடர்பான முறையான அறிவிப்பு இன்னும் வரவில்லை.

அதேபோல டிசம்பர் முதல் இரண்டு வாரங்களில் வரவிருந்த தனுஷ் நடித்த ‘வாத்தி’, சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ்களும் சற்றே தள்ளிப்போகின்றன. ராகவா லாரன்ஸ் நடித்த ‘ருத்ரன்’ டிசம்பரில் வெளியாக வேண்டியது ஆனால், இப்போது ஏப்ரலுக்குத் தள்ளிப்போய்விட்டது. ‘வாத்தி’, ‘பத்து தல’ ரிலீஸ் தள்ளிப்போவதால், டிசம்பரில் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’யை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகின்றனர்.

கட்டா குஸ்தி

மேற்கண்ட இந்தப் பட்டியலில் தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலப்படங்களின் ரிலீஸ்கள் இடம்பெறவில்லை. தமிழிலும் வெளியாகும் ‘அவதார் 2’ போன்ற படங்களையும் கருத்தில் கொண்டால் இத்தனை படங்களுக்கும் தியேட்டர்கள் எப்படிக் கிடைக்கும் என்பதே பல தயாரிப்பாளர்களின் தற்போதைய கவலையாக இருக்கிறது. குறிப்பாக பொங்கலுக்கு, ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ என இரண்டு பெரிய ஸ்டார்களின் படங்கள் வருவதால், அதற்குள் தங்களின் படங்களை ரிலீஸ் செய்யவே பல தயாரிப்பாளர்களும் முயன்று வருகின்றனர்.

இந்த லிஸ்ட்டில் நீங்கள் எந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் வெயிட்டிங்? கமென்ட்டில் சொல்லுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.