பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் சார்பில் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளை நேற்று அனுசரித்தனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் பண்ணவயல் சாலையில் உள்ள புனித ராயப்பர் கல்லறைத் தோட்டத்தில் நேற்று மாலை ஒன்று கூடிய கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தில் உயிர் நீத்தவர்களின் நினைவாக அவர்களது கல்லறையை மலர்களால் அலங்கரித்து அந்த கல்லறை முன்பு நின்று கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை உலக ரட்சகர் ஆலய அதிபரும், பங்கு தந்தையுமான பேரருட்திரு அந்தோணிசாமி தலைமையில் அனைத்து கல்லறைகளும் புனிதம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஏழை, எளியவர்களுக்கு கிறிஸ்தவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த இனிப்புகளை வழங்கினர். திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப் பள்ளி அருகே கிறிஸ்தவர்களின் புனிதஸ்தலமாகவும், இந்தியாவில் உள்ள பசிலிக்காவில் இதுவும் ஒன்றாகவும் பூண்டிமாதா ேபராலயம் திகழ்கிறது.
இப்பேராலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2ம் தேதி இறந்தோர் நினைவுநாள் (கல்லறை திருநாள்) அனுசரிக்கப்படுகிறது. நேற்று இறந்தவர்களுக்கான திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதில் இப்பேராலயத்தில் பங்குதந்தையாக இருந்து மறித்த இறையடியார் லூர்து சேவியருக்கும், ராயப்பர் அடிகளாருக்கும் சிறப்பு திருப்பலியை பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், மற்றும் ஆன்மீக குருக்கள், நிறைவேற்றினர். அதன்பிறகு இறையடியார் லூர்து சேவியர், மற்றும் இராயப்பர் அடிகளாரின் கல்லறையிலும் சிறப்பு ஜெப வழிபாடு செய்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். வல்லம்: வல்லம் பெரியார் நகர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளை கடைப்பிடித்தனர். அப்பகுதியில் இருந்த கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி தங்களின் முன்னோர்களை நினைத்து குடும்பம், குடும்பமாக வந்து வழிபாடு நடத்தினர்.
திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள மணலூர், திருவிசநல்லூர், அம்மன் பேட்டை, திருபுவனம் திருநீலக்குடி, ஆடுதுறை, கொல்லம் பிள்ளையார் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அமைந்துள்ள கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் நேற்று கூட்டு வழிபாடு செய்தனர். தங்களது குடும்பத்திலும் மற்றும் பிற உறவினர்கள், நண்பர்கள் இறந்த பிறகு புதைக்கப்பட்ட இடங்களில் சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்தனர். பின்னர் மெழுகுவர்த்தி, ஊதுபத்தி ஏற்றி வைத்து இறந்தவர்களின் ஆன்மா இயேசு பெருமானின் திருவடியில் இளைப்பாற வேண்டுமென கூட்டுப் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.