Gujarat Assembly Elections 2022: குஜராத் சட்டசபை தேர்தல் 2022 டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே ஆகியோர் மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் 135 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் சட்டசபை தேர்தலில், இந்த ஆண்டு 4.9 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், கிராமப்புறங்களில் 34,000 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உட்பட 51,000 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் குமார் கூறினார். தேர்தலை முன்னிட்டு, மத்திய ஆயுத போலீஸ் படைகளின் 160 பிரிவுகளை மத்திய அரசு மாநிலத்திற்கு அனுப்பியுள்ளது. 182 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி 18, 2023 அன்று முடிவடைகிறது. குஜராத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்ட பிறகு, மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்.
இமாச்சலப் பிரதேசத்திற்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்த நிலையில், குஜராத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. குஜராத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் முன்னதாக தெரிவித்திருந்தன. டிசம்பர் 8-ம் தேதி ஹிமாச்சலப் பிரதேசத்துடன் சேர்த்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
குஜராத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது, அப்போது பாஜக தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வெற்றி பெற்றது. கடந்த முறை மாநில சட்டசபையில் மொத்தமுள்ள 182 இடங்களில் காவி கட்சி 99 இடங்களையும், காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றியது.இந்த ஆண்டு நடைபெறும் தேர்தல், ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டியாக அமைய உள்ளது. குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதாக பாஜக கட்சியின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர், அதே நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தில் வாக்காளர்களை கவர முழுப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையில், மகாராஷ்டிரா, ஹரியானா, பீகார், தெலுங்கானா, ஒடிசா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள ஏழு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று, நவம்பர் 6-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.