சென்னை: “பெருமழை பாதிப்பு என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, மக்கள் மீது அக்கறை கொண்டு, களத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டாரா?” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் திரு.வி.க.மண்டலத்தில் மழைநீர் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை அவர் கூறும்போது, “இந்த மழைக்கு சென்னை மாநகராட்சியில் ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்கி நிற்கவில்லை. தமிழக முதல்வரின் ஓராண்டுகால தொடர் நடவடிக்கைகளால் இந்தச் சூழ்நிலை உருவாகியுள்ளது. தண்ணீர் தேங்கியிருந்த தாழ்வான பகுதிகளில் இருந்துகூட 90 முதல் 95 சதவீத தண்ணீர் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் வருகின்ற ஆண்டுகளில் தண்ணீர் தேங்காதவாறு போர்க்கால அடிப்படையில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்” என்று கூறினார்.
அப்போது அவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் அறிக்கையைச் சுட்டிக்காட்டு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “பெருமழை பாதிப்பு என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, 3, 4 நாட்கள் மழையின் கால அளவு நீடித்துக்கொண்டிருக்கிறதே… மக்கள் மீது அவர் அக்கறை கொண்டிருந்தால், எங்காவது சுற்றித் திரிந்திருக்க வேண்டும். அவர் எங்காவது வந்தாரா? நிவாரணப் பணிகளை மேற்கொண்டாரா? 10 ஆண்டு காலம் மாநகராட்சியை சீரழித்தார்கள். கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்… இதை மையப்படுத்தி கொசஸ்தலை பேசின் திட்டத்தில் ரூ.3500 கோடி அளவுக்கு டெண்டர் விட்டார்கள். அந்தப் பணிகள் திமுக ஆட்சிப் பொறுப்பேற்கும் வரையில் தொடங்கவில்லை. 700 கி.மீ அளவிலான அந்த பணியில் ஓராண்டில் 40 சதவீத பணிகளை முடித்துள்ளோம்.
மேலும், அவரது அறிக்கையில், 4 ஆண்டுகளில் 176 கி.மீட்டர் அளவுக்கு மழைநீர் கால்வாய் கட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 200 கி.மீட்டர் நீளத்திற்கு சுமார் ரூ.700 கோடி ரூபாய் அளவிலே திட்டத்தை தீட்டியுள்ளார். அதில், இன்றுவரையில், 156 கி.மீட்டர் நீளமுள்ள மழைநீர் கால்வாய் பணிகளை முடித்துள்ளார்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஆண்டு பருவ மழை தொடங்கிய முதல் நாளிலேயே சென்னை தத்தளித்ததற்கான காரணம் வெள்ள நீர் கால்வாயில் இந்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டிய பணியை தொடராமலும், திட்டமிட்டு முழுமையாக முடிக்காததாலும், வெள்ள நீர் போக முடியாமல் நிறைய இடங்களில் தேங்கியுள்ளது. இன்னும் பெருமளவில் பருவ மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இனியும் எதற்கெடுத்தாலும் அதிமுக அரசின் மீது குற்றம் சொல்லி பிரச்சினைகளை திசை திருப்பாமல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் அனைத்து மக்களையும் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை இந்த திமுக அரசுக்கு உண்டு. மேலும், எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க முறையான வழிமுறைகளை கையாள வேண்டும்” என்று 4 பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.