பச்சிளங்குழந்தையை மீட்டு தாய்ப்பால் கொடுத்து பாதுகாத்த போலீஸ் அதிகாரி ரம்யாவுக்கு ஐகோர்ட்டு பாராட்டு!

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு பெண் போலீஸ் அதிகாரி ரம்யா பாலூட்டி பாதுகாத்த சம்பவம் அவருக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டை பெற்றுத்தந்தது.

இந்த நிலையில், கேரள ஐகோர்ட்டு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் பெண் போலீஸ் அதிகாரி ரம்யாவை பாராட்டியுள்ளார்.சிவில் போலீஸ் அதிகாரி ரம்யா காட்டிய இரக்கத்தை அவர் வெகுவாக பாராட்டினார். அவரிடம் ஒப்படைக்க மாநில காவல்துறைத் தலைவருக்கு சான்றிதழை அனுப்பியுள்ளார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ரம்யாவுக்கு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

நீங்கள் இன்று, காவல் துறையின் சிறந்த முகமாக இருக்கிறீர்கள். ஒரு சிறந்த அதிகாரி மற்றும் உண்மையான தாய் – நீங்கள் இந்த இரு கடமையையும் செய்துள்ளீர்கள்!

வாழ்க்கை என்னும் அமிர்தம் தெய்வம் தந்த ஒரு வரம். அதை ஒரு தாயால் மட்டுமே கொடுக்க முடியும்.

பணியில் இருக்கும் போது நீங்கள் அதை வழங்கினீர்கள். அத்துடன், எதிர்காலத்திற்கான மனித நேயத்தின் நம்பிக்கையை எங்கள் அனைவரிடத்திலும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவினீர்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே, போலீஸ் அதிகாரி ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினரையும் மாநில காவல்துறைத் தலைவர் அனில் காந்த், காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்து, பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். அவரது செயல்கள், போலீஸ் படையின் நற்பெயரை உயர்த்தியது என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, கடந்த அக்டோபர் 29ஆம் தேதி, கேரளாவில் கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு பெண் போலீஸ் அதிகாரி ரம்யா பாலூட்டியுள்ளார்.கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் சேவாயூர் காவல்நிலைய பெண் போலீஸ் அதிகாரி ரம்யா இப்போது அனைவரது மனதையும் வென்றுள்ளார்.

பூலக்கடவைச் சேர்ந்த ஆஷிகா என்ற பெண், கடந்த அக்டோபர் 22ஆம் தேதி குடும்பத் தகராறு காரணமாக தனது குழந்தையை கடத்திச் சென்றதாக தனது கணவர் ஆதில் மற்றும் அவரது தாய் மீது சேவாயூர் போலீஸில் புகார் அளித்தார். கடத்தப்பட்ட குழந்தையுடன் ஆதில் மற்றும் அவரது தாயார் சுல்தான் பத்தேரியில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே பெண் போலீஸ் அதிகாரி ரம்யா உட்பட அதிகாரிகள் குழு அங்கு வந்து குழந்தையை மீட்டனர். இந்த வழக்கு தொடர்பாக குழந்தையின் தந்தை ஆதில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நீண்ட நேரமாக பசியால் வாடியிருந்த குழந்தையின் உடல்நிலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது.குழந்தையின் மருத்துவ பரிசோதனையின் போது, ​​குழந்தையின் உடலில் சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருப்பதை மருத்துவர் கவனித்தார். அப்போது குழந்தை பசியால் அழ ஆரம்பித்தது.

இதை கவனித்த போலீஸ் அதிகாரி ரம்யா, உடனே டாக்டரிடம், தான் ஒரு வயது குழந்தைக்கு தாய் என்றும், இந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா என்றும் கேட்டுள்ளார். மருத்துவர் அனுமதித்த தருணத்தில், அந்த குழந்தையை தனது சொந்த குழந்தையாக உணர்ந்து அவர் குழந்தைக்கு பாலூட்டினர்.

மேலும் இது தனது வாழ்வின் மிக அசாதாரணமான தருணம் என்றும் இந்த நாள் தனது வாழ்க்கையில் மிகவும் அர்த்தமுள்ள நாள் என்றும் பசியால் இந்தக் குழந்தை அழுதபோதும்கூட என் குழந்தைபோல் நினைத்துதான் பால் கொடுத்தேன் என்று அவர் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.