`சதுரங்க வேட்டை’ பாணியில் ஏமாற்றிய மோசடி மன்னன்… லேப்டாப் மூலம் வெளிவந்த பகீர் தகவல்கள்!

சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல் ஏமாந்து, பின் ஏமாற்றுவதையே தொழிலாக கொண்டு பலரிடம் பண மோசடி செய்த நபரை கன்னியாகுமரி போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி வடக்கு குண்டல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கடந்த 30 ஆம் தேதி, 2 பெண்கள் உள்பட 8 பேர் கொண்ட கும்பல் சில அறைகளை எடுத்துத் தங்கியுள்ளனர். இந்நிலையில், அவர்களை சந்திக்க பலரும் கார்களில் விடுதிக்கு பெரிய பெரிய பெட்டிகளுடன் வந்து சென்றுள்ளனர். இதனால் அந்தப்பகுதியே அந்நேரங்களில் பரபரப்பானது.
image
இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சிலர், கன்னியாகுமரி போலீசாருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், அவர்களை விசாரிக்க முயன்றுள்ளனர். தகவலறிந்து காவலர்களை கண்டதும் அங்கிருந்த சிலர் தப்பியோடி இருக்கின்றனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், அவர்கள் பணம் இரட்டிப்பு செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் என காவல்துறையினருக்கு தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து விடுதி அறையில் இருந்து 2 பெண்கள் உள்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஏமாற்றியவர்களில் ஒருவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் பகுதியைச் சார்ந்த சுந்தர பாண்டியன் என்பதும், அவர் தன்னிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் 3 மாதத்தில் 5 மடங்காக ரூ.50 ஆயிரம் கொடுப்போம் என பலரிடமும் கூறி ஏமாற்றி வந்துள்ளார் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
image
அந்நபர்தான் புரோக்கர்கள் மூலம் தகவல் கொடுத்து பலரை பணத்துடன் கன்னியாகுமரி வரவழைத்துள்ளார். தனது கும்பலின் உதவியோடு ஏமாற்றுவதை தொழிலாக கொண்ட இவரது போலி வாக்குறுதிகளை நம்பி 25-க்கும் மேற்பட்ட நபர்கள் பணத்தை கொடுத்து ஏமாந்திருப்பது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் தங்கி இருந்த அறைகளை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அங்கிருந்த ஆவணங்கள், 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப், மற்றும் ரூ.11 லட்சம் பணம் ஆகியவற்றை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுந்தர பாண்டியன் என்பவர் சரவண பவன் ஓட்டலில் சர்வரக வேலை செய்து வந்துள்ளார். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் ரைஸ் புல்லிங் எனப்படும் இரிடியம் மோசடி கும்பலிடமும், மண்ணூளி பாம்பு விற்கும் கும்பலிடமும் சிக்கி பணம் கொடுத்து வசமாக ஏமாந்துள்ளார்,
image
இதையடுத்து விரக்தியில் சுத்தித் திரிந்த சுந்தர பாண்டியன், சதுரங்க வேட்டை படத்தில் ‘உன்னை ஏமாற்றும் நபர் மீது கோவம் வேண்டாம். ஒரு வகையில் அவன் உனக்கு குரு’ என வரும் வசனம் போல், தான் ஏமாந்த வழியை பின்பற்றி மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் ஒருகட்டத்தில் முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் சுந்தர பாண்டியன், தமிழகம் முழுவதும் பல நபர்களை தொடர்பு கொண்டு 3 மாதத்தில் 5 மடங்கு பணம் தருவதாக ஆசையை தூண்டும் வகையில் பேசி தனது மோசடி வலையில் அவரை சிக்க வைத்துள்ளார்.
தன்னை ஒரு தொழிலதிபர் போல் காட்டிக்கொள்ள பவுன்சர்கள் மற்றும் அழகான இளம் பெண் அசிஸ்டன்ட்களை பணியமர்த்தி காரில் பந்தாவாக வந்துள்ளார் அவர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழியை உறுதிசெய்யும் வகையில் தற்போது மோசடி மன்னன் போலீசார் வலையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கும்பலைச் சேர்ந்த 17 மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கன்னியாகுமரி போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.