மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள நாலாசோபாரா பகுதியில் வசிக்கும் 20 வயது இளம் பெண் ஒருவர் திருமணம் செய்துகொள்ளாமல் கலாம் கான் என்பவருடன் தனது வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், இரவில் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக இருவர் மீதும் ஆசிட் வீசப்பட்டது. இதில் இரண்டு பேரின் முகம் மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அலறித் துடித்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
இது குறித்து அந்தப் பெண் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், “நான், கடந்த ஆண்டு தபீக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு காட்கோபரில் வசித்து வந்தேன். ஆனால், என்னுடைய நடத்தையில் சந்தேகப்பட்டு என்னை தபீக் அடித்து உதைத்தார். இதனால் கடிதம் எழுதி வைத்துவிட்டு அவரைவிட்டு வந்துவிட்டேன்.
அதன் பிறகு கம்ரான் அன்சாரி என்பவரை சந்தித்தேன். அவரும் காட்கோபரை சேர்ந்தவர்தான். அவருடன் எனக்கு காதல் ஏற்பட்டது. இதனால் அவருடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தேன். அன்சாரியும், தபீக்கும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள். ஆனால், அன்சாரி என்னை திருமணம் செய்துகொள்ளாமல் இழுத்தடித்தார். இதனால் அவரை விட்டுவிட்டேன்.
அதன் பிறகு நாலாசோபாராவைச் சேர்ந்த கலாம் கான் என்பவரைச் சந்தித்தேன். அவருடன் காதல் ஏற்பட்டதால், அவருடன் கடந்த சில மாதங்களாக சேர்ந்து வாழ்கிறேன். கலாம் கானைப் பற்றி அன்சாரி, தபீக்குக்கு தெரியாது. நான் வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்வது குறித்து தெரிந்தவுடன் எங்களது வீட்டிற்கு இருவரும் வந்து என்னுடனும், கலாம் கானுடன் சண்டையிட்டதோடு எங்களை மிரட்டிவிட்டுச் சென்றனர்.
அவர்கள் இருவரும்தான் நாங்கள் தூக்கிக்கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக எங்கள் மீது ஆசிட் வீசிச் சென்றிருக்கின்றனர்” என்று தெரிவித்தார். அந்தப் பெண் புகார் தெரிவித்த இரண்டு பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.