குஜராத் தேர்தல் அரசியலில் பாஜக… கடந்த கால வரலாறு என்ன சொல்கிறது?

குஜராத் மாநிலம் கடந்த 1962ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. இதில் 1980ஆம் ஆண்டு 6வது சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பாஜக முதல்முறை போட்டியிட்டது. அதில் 14.02 சதவீத வாக்குகளுடன் 9 இடங்களில் வென்றது. அப்போது பாஜகவிற்கு கிடைத்த இடம் மூன்று. இதையடுத்து 1985ல் 14.96 சதவீத வாக்குகளுடன் 11 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர் 1990ல் நடந்த தேர்தல் பாஜக விஸ்வரூபம் எடுத்தது. அப்போது 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஜனதா தள் கட்சியுடன் இணைந்து ஆளுங்கட்சியாக மாறியது.

முதல்வர் பதவி ஜனதா தளத்தின் சிமான்பாய் படேலுக்கும், துணை முதல்வர் பதவி பாஜகவின் கேசுபாய் படேலுக்கும் கிடைத்தது. குஜராத் பாஜகவில் உச்சம் தொட்ட முதல் தலைவர் கேசுபாய் படேல் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தான் குஜராத் மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராகவும் மாறினார். 1995ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 121 இடங்களில் வென்று இமாலய வெற்றியை பதிவு செய்தது. 42.51 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தில் பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்தது. கேசுபாய் படேல் முதல்வர் நாற்காலியில் அமர வரலாறு திருத்தி எழுதப்பட்டது.

இந்த தேர்தலில் ஜனதா தள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. முக்கியத் தலைவர்கள் மாற்று கட்சிகளில் இணைந்ததாலும், கட்சிக்கு சரியான தலைமை இல்லாத காரணத்தாலும் செல்வாக்கு சரிந்தது. அதுவும் ஒரே தேர்தலில் காட்சிகள் மாறியது குஜராத் அரசியலில் பெரும் திருப்புமுனையாக பார்க்கப்பட்டது. இம்மாநிலத்தில் இந்துத்துவா அரசியல், இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலை பெரிதாக உருவெடுக்கத் தொடங்கியது. இதனை அப்படியே வளர்த்தெடுக்க பாஜக விரும்பியது. இதற்கு பலனாக இரண்டாவது முறையாக 1998ல் பாஜக ஆட்சியை பிடித்தது.

44.81 சதவீத வாக்குகளுடன் 117 இடங்களில் வென்று மீண்டும் கேசுபாய் படேல் முதல்வர் ஆனார். இந்நிலையில் ஆட்சி நிறைவடைய 8 மாதங்கள் இருந்த சூழலில் 2001ஆம் ஆண்டு முதல்வர் கேசுபாய் படேலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் குஜராத் நிலநடுக்கம் ஒட்டுமொத்த நாட்டையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வரலாறு காணாத பெரும் சோகம் ஏற்பட்ட நிலையில் ஆளுங்கட்சிக்கு நெருக்கடியாக மாறியது. இதனால் ராஜ்கோட் மேற்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த நரேந்திர மோடி முதல்வர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டார்.

2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது முதல்வராக இருந்த மோடி உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழவே, அதிரடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் முன்கூட்டியே தேர்தல் நடந்தது. 11வது சட்டமன்றத்திற்கு தேர்தலில் பாஜக 127 தொகுதிகளில் வென்று புதிய உச்சம் தொட்டது. முதல்முறை எம்.எல்.ஏக்களின் ஒருமித்த ஆதரவால் மோடி முதல்வரானார். அதன்பிறகு 12 ஆண்டுகள் நரேந்திர மோடியே முதல்வராக தொடர்ந்து பதவி வகித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் 2007ல் நடந்த தேர்தலில் பாஜக 117 (49.12% வாக்குகள்), 2012 சட்டமன்ற தேர்தலில் பாஜக 115 (47.86% வாக்குகள்) தொகுதிகளையும் கைப்பற்றியது. இந்நிலையில் பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு செய்யப்பட தனது குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆனந்திபென் படேல் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். 2017ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியை தக்க வைத்துக் கொண்டாலும் குஜராத் சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் முதல்முறை இரண்டு இலக்க எண்ணிக்கையில் வெற்றி சரிந்தது.

அப்போது
காங்கிரஸ்
சற்றே எழுச்சி கண்டது. இதற்கு படேல் சமூகத்தினரின் போராட்டம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மோடிக்கு பிறகு ஆனந்திபென் படேல், விஜய் ரூபானி, பூபேந்திர படேல் என 8 ஆண்டுகளில் மூன்று முதல்வர்கள் பதவி வகித்துள்ளனர். இந்த சூழலில் தான் 2022 சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.