ராஞ்சி: முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சவால் விடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனின் நெருங்கிய நண்பரான மிஷ்ராவையும், மேலும் இருவரையும் அமலாக்கத்துறை ஏற்கெனவே கைது செய்துள்ளது. அதோடு, மிஷ்ராவுக்குச் சொந்தமான இடங்கள் உள்பட மொத்தம் 19 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. இதன் அடிப்படையில், ரூ.1,000 கோடி அளவுக்கு பண மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதைத் தொடர்ந்து தற்போது இந்த வழக்கில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவெடுத்து, அவருக்கு நேற்று சம்மன் அனுப்பியது. அதில், ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் இன்று (நவ. 3) நடைபெறும் விசாரணையில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், விசாரணையின்போது பதில்கள் பதிவு செய்யப்படும் என்றும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ராஞ்சியில் உள்ள தனது வீட்டின் முன் திரண்ட ஆதரவாளர்கள் மத்தியில் பேசியது: “விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது. ஆனால், சத்தீஸ்கரில் இன்று எனக்கு நிகழ்ச்சி இருக்கிறது. நான் மிகப் பெரிய குற்றம் இழைத்துவிட்டதாக அமலாக்கத் துறை கருதுமானால் என்னை கைது செய்யட்டும். ஏன் என்னிடம் விசாரணை நடத்த வேண்டும்?
ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான் அவர்களிடம் கேட்கிறேன், நீங்கள் ஏன் ஜார்க்கண்ட் மக்களைப் பார்த்து பயப்படுகிறீர்கள்? நமது மாநிலத்தில் சில குழுக்கள் இருக்கின்றன. ஆதிவாசிகள் தங்கள் சொந்த கால்களில் நிற்கக் கூடாது என அந்த குழுக்கள் எண்ணுகின்றன. ஜார்க்கண்ட் மாநிலம் அதன் மக்களால்தான் ஆளப்பட வேண்டும். வெளியாட்களால் அல்ல. வரும் மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக ஜார்க்கண்ட் மாநிலத்தில் துடைத்தெறியப்படும்” என்று அவர் பேசினார்.