மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் லலிதா கூறியுள்ளார்.
மழை பாதிப்புகள் தொடர்பான செயல்பாடுகளுக்காக மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை ஆட்சியர் லலிதா இன்று(நவ.3) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கூறியதாவது: “வடகிழக்குப் பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் கேட்டறிந்தார். மாவட்டத்தில் அக்.31 வரை 105 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது சராசரியை விட குறைவு. ஆனால் நவ.1-ம் தேதி முதல் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிக மழை பெய்துள்ளதால் ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. நிலங்கள் ஈரப்பதத்துடன் உள்ளன. அதனால் மக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆறுகள், வாய்க்கால்களில் கரைகள் பலமில்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால் மக்கள் அந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் 10 துறைகளின் அலுவலர்கள் கொண்ட 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 125 அலுவலர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவார்கள். முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை இக்குழுக்கள் மேற்கொள்ளும். மாவட்டத்தில் 15 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன.
346 பள்ளிகளில் நிவாரண மையங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்மையங்களில் உணவு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாயத்து நிலையில் உள்ள அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பணியிடங்களில் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வாய்க்கால்களில் அடைப்பு, உடைப்பு ஏற்பட்டால் சரி செய்யும் வகையில் நீர்வளத்துறை மூலம் 11 இடங்களில் 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 400 யூனிட் மணல், சவுக்கு மரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளுக்காக காவல் துறை மூலம் 9 குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தீயணைத்துறை மூலம் தரங்கம்பாடி, சீர்காழி படகுகளுடன் தலா ஒரு குழு தயார் நிலையில் உள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 04364-222588, 9487544588 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். மேலும் 8148917588 என்ற வாட்ஸப் எண்ணில் புகைப்படங்களுடன் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் குறித்து ஒரு மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுளது. மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என ஆட்சியர் கூறினார்.
இதனிடையே, ஆட்சியர் ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், வேளாண் இணை இயக்குநர் ஜெ.சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வே.சண்முகம், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.