கர்நாடக மாநிலம் ஹாசன் நகரின் உதயகிரி பகுதியில் வசித்து வருபவர் மல்லப்பா (58). இவர், அந்த பகுதியிலுள்ள ஹிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டின் முன்புறம் சென்ற மின் கம்பியில் கார் சாவி கிடந்துள்ளது. இதனை கண்ட மல்லப்பா அதனை எடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் அவருக்கு அந்த கம்பி எட்டவில்லை. இதனால் கம்பு போன்று நீளமான ஒரு பொருளை வைத்து அதனை எடுக்க எண்ணியுள்ளார். அதன்படி வீட்டில் இருந்த தரை துடைப்பானை எடுத்து வந்து அதனை எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த குச்சி மின்கம்பியில் பலமாக உரசியுள்ளது. இதனால் அவர் மீது பெரிதாக மின்சாரம் தாக்கி தீப்பிடித்து பலத்த சத்தத்துடன் அவர் கீழே விழுந்தார். சத்தத்தை கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர், அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இது குறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகள், மல்லப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.