திருச்சியில் முதல் முறையாக புதைவட மின் கேபிள்கள் – மின்வாரிய ஊழியர்கள் சாதனை

திருச்சி மாவட்டத்தில் முதன்முறையாக மின்கம்பங்களை அகற்றி புதைவட மின் கேபிள்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளது ராஜா காலனி இரண்டாவது தெரு. இந்த தெருவில் மின் கம்பங்கள் சாலையின் நடுப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது. பொதுமக்கள் தொடர்ந்து இந்த மின்கம்பங்களை அகற்றுமாறு கோரிக்கை வைத்தனர்.
கடந்த மாதம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மின்வாரிய அதிகாரிகளுடன் இந்த சாலையை நேரில் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். உடனடியாக இந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதைவடை மின் கேபிள்களை பொருத்த உத்தரவிட்டார். திருச்சி மின்வாரிய அதிகாரிகள் இதற்கான செலவு தொகையும் திட்டங்களையும் அமைச்சரிடம் தெரிவித்தனர். 45 லட்சம் ரூபாய் செலவில் புதிய உயர் மின்னழுத்த தாழ்வு மின்னழுத்த கேபிள்களை பூமிக்கு அடியில் புதைத்து அதற்கான பணியை துவக்கினர்.

image

இதற்கான அனைத்து மின்சார கேபிள்கள் மற்றும் மின்மாற்றிக்கு தேவையான உபகரணப் பொருட்களை சென்னை, கோயம்புத்தூர், சேலம்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெற்று பணியை மிக விரைவாக மேற்கொண்டனர். ஒரே நாளில் நடுவில் இருந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு, பூமிக்கு அடியில் மின் கேபிள்களை புதைத்து வீடுகளுக்கு மின்சாரத்தை வழங்கி உள்ளனர்.

image

திருச்சி மாவட்டத்திலேயே புதைவட மின் கேபிள்கள் இப்பகுதியில்தான் முதன்முறையாக புதைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கான 15 மின்சார பெட்டிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

image

இதற்கான 58 லட்ச ரூபாய் செலவுத்தொகை திருச்சி மாநகராட்சி நிதியிலிருந்து நேரடியாக மின்வாரியத்திற்கு ஆணையர் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது இச்சாலை நடுவில் மின்கம்பங்கள் இல்லாமல் பொதுமக்கள் தங்கள் வாகனத்தை இயக்கவும் இரவில் பயணிக்கும் போது அச்சம் கொண்டிருந்த சூழ்நிலை விலகி உள்ளதாகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.