ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அமலாக்கத் துறைக்கு சவால் விடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கிய விவகாரத்தில், முறைகேடு நடைபெற்றதாக, முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது, அமலாக்கத் துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகும்படி, அவருக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், அமலாக்கத் துறை சம்மனை புறக்கணித்த ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ராஞ்சியில் இன்று, தொண்டர்களிடம் பேசியதாவது:
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநில அரசை சீர்குலைக்க, மத்திய படைகளை பாஜக கட்டவிழ்த்து விட்டுள்ளது. அமலாக்கத் துறை மற்றும் சிபிஐக்கு நான் பயப்படவில்லை. நான் குற்றவாளி என்றால், என்னை ஏன் விசாரிக்கிறீர்கள்? உங்களால் முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்.
இந்த சதிக்கு தகுந்த பதில் கிடைக்கும். பழங்குடியினர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராய்ப்பூருக்கு செல்ல உள்ளேன். பாஜக தலைமையிலான மத்திய அரசு அரசியல் பழிவாங்கலில் பிஸியாக இருக்கிறது. பண மோசடி செய்து தப்பி ஓடிய தொழிலதிபர்களை விட்டு விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.