ரயில் பயணம் என்பது பலருக்கும் மிகப் பிடித்த ஒன்று. மிக நீண்ட தூர பயணங்களுக்கு பலரும் தேர்வு செய்வது ரயில் பயணங்களைத்தான். பாதுகாப்பும் சௌகர்யமும் அதிகமாக இருக்கும் என, நாம் தேர்வு செய்யும் இந்த ரயில் பயணங்களில், உணவில் ஆரம்பித்து திருட்டு சம்பவம், கழிவறை சரியில்லாமல் இருப்பது போன்ற சிக்கல்களையும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பயணிக்கும் போது பல பிரச்னைகளையும் சில நேரங்களில் எதிர்கொள்ள நேரிடும். அது போன்ற சூழலில், அது குறித்து எப்படி புகார் அளிப்பது என்பது குறித்து பார்க்கலாம்…
ஆப்
* Rail MADAD என்ற ஆப் Google Play Store-ல் உள்ளது. அதனை டவுன்லோட் செய்து கொள்ளவும். இந்த செயலியின் மூலமாக ரயிலில் நடக்கும் கடத்தல், திட்டு சம்பவம் முதல் கழிவறை, உணவு வரை புகார்களை பதிவு செய்யலாம்.
* இந்தச் செயலியை க்ளிக் செய்த பிறகு திறக்கும் பக்கத்தில், Train complaint, Station complaint, Track complaint போன்ற தனி தனி பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
* இதில் உங்களுடையது எந்தவிதமான புகார் என்பதை பொறுத்து, அந்தப் பக்கத்தை க்ளிக் செய்து கொள்ளவும். அதில் உங்களுடைய புகாரை complaint description என்ற பகுதியில் எழுதவும்.
* பின்பு Journey details என்ற பகுதியில் நீங்கள் எந்த ட்ரெயினில் பயணிக்கிறீர்கள், எந்த இடத்தில் தற்போது இருக்கிறீர்கள் என்பது குறித்த விவரங்களை உள்ளிடவும்.
* ஆதாரத்துக்கு இணைக்க போட்டோ, வீடியோ எதுவும் இருந்தால், அவற்றையும் உள்ளிட்டு Submit கொடுக்கவும்.
* Submit கொடுத்தவுடன் Login செய்யச் சொல்லி கேட்க்கும். ஏற்கெனவே இந்த செயலியில் உங்களுக்கு Register செய்யப்பட்டிருந்தால் அந்த User name, Password கொடுத்து புகாரை பதிவு செய்யலாம். இதுதான் முதல் முறை, நீங்கள் ஏற்கெனவே Register செய்யவில்லை என்றால் Login அருகிலேயே Sign up என்ற பகுதி இருக்கும். அதனை க்ளிக் செய்து உள்ளே சென்று உங்களுடைய பெயர் மற்றும் தொடர்பு எண் போன்றவற்றை உள்ளிடவும். கூடவே Password-ஐ உள்ளிட்டு Sign up செய்து பின் புகாரை பதிவு செய்யலாம்.
* ரயில் பயணி புகார் அளித்தவுடன் ரயில்வே அதிகாரிகள் அல்லது ரயில்வே காவல்துறையினர் உடனடியாக புகார் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுவார்.
139 சேவை
* ஆன்லைன் ஆப் அல்லது வெப்சைட் போன்றவற்றை அந்தப் பயண நேரத்தில் பயன்படுத்த முடியாதவர்கள் உடனடியாக 139 என்ற எண்ணிற்கு கால் செய்து புகாரை தெரிவிக்கலாம்.
SMS
* 9717630982 என்ற எண்ணிற்கு SMS அனுப்புவதன் மூலமாகவும் உங்களால் புகாரை பதிவு செய்ய முடியும். நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு புகாருக்கும், ஒவ்வொரு புகார் எண் கொடுக்கப்படும்.