இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு.. நினைவுக்கு வரும் பெனாசிர் பூட்டோ கொலை..

பாகிஸ்தானில் அந்நாட்டு ஷெபாஷ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிராக நீண்ட அணிவகுப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து குஜ்ரன்வாலாவில் குவிந்திருந்த ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்ற முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வந்திருந்தார். அப்போது அங்கிருந்த கண்டெய்னர் லாரியின் மேல் நின்று இம்ரான் கான் உரையாற்றியபோது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இம்ரான் கான் கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டு அவரை உடனே SUV காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையே, துப்பாக்கி சூடு நடத்திய நபரை அங்கிருந்தவர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். சுதாரித்துக்கொண்ட போலீசார் அந்த நபரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்யவே இந்த துப்பாக்கி சூடு நடந்ததாக சொல்லப்டுகிறது. கடந்த 2007 இல் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ இதேபோல ஒரு பேரணியின்போது சுட்டு கொல்லப்பட்டார்.

பாகிஸ்தான் நாட்டை ஆட்சி செய்த முதல் முஸ்லிம் பிரதமர் பெண்மணி பெனாசிர் பூட்டோ. இவர் கடந்த 2007 டிசம்பர் மாதம் 27 அன்று பிலால் என்ற 15 வயது மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். பெனாசிர் பூட்டோ ராவல்பிண்டியில் தேர்தல் பேரணியை முடித்துக் கொண்டு அவரது கான்வாய் அருகே வந்தபோது, உடலில் வெடிகுண்டுகளை பொருத்திக்கொண்டு இருந்த பிலால் என்ற சிறுவன் தன்னைத்தானே வெடிக்கச் செய்து அந்த படுகொலையை அரங்கேற்றினான்.

தற்போது இம்ரான் கானையும் கொல்ல திட்டம் வகுக்கப்பட்டிருக்கலாம் ஆனால் இம்ரான் கான் பலத்த காயத்திலிருந்து உயிர் தப்பினார் என்று தேசிய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், அங்கு நடந்துள்ள துப்பாக்கி சூட்டில் இம்ரான் கானின் கட்சி தலைவர்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் தெஹ்ரிக் இ-இன் சாப் கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் பிரதமரானார். இதனிடையே, பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றன.

இதையடுத்து, பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். அதன்படி, நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ-இன் சாப் அரசு கவிழ்ந்தது. அந்நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக போர் கோடி தூக்கியுள்ள இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தனி மனித தாக்குதலா அல்லது எதிர் கட்சிகளின் சூழ்ச்சியா என்பது விசாரணைக்கு பின்னர் தெரியவரும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.