களக்காடு அருகே விளை நிலங்களில் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம்: 500 வாழைகள் நாசம்; விவசாயிகள் கவலை

களக்காடு: களக்காடு அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்ததில் 500 வாழைகள் நாசமானது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மலையடிவார பகுதியில் அரசபத்து, கட்டுவிளை விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழைகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு  வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு பன்றிகள் கூட்டம் விளை நிலங்களுக்குள் புகுந்தன. இதனை பார்த்த விவசாயிகள் அவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பன்றி கூட்டம் நாலாபுறங்களிலும் இருந்து நுழைந்ததால் விவசாயிகள் திணறினர். மேலும் விவசாயிகளை நோக்கி ஓடி வந்ததால் உயிருக்கு பயந்து விவசாயிகள் பின்வாங்கினர். அதற்குள் பன்றிகள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட ஏத்தன் ரகத்தை சேர்ந்த வாழைகளை நாசம் செய்தன.

இவைகள் மஞ்சுவிளையை சேர்ந்த சில்கிஸ், பிரேட் செல்வின், தங்கராஜ், பாக்கியராஜ், ராஜ், முத்துக்குடி, ஜேம்ஸ் சுந்தர், லுர்கின் ஐசக் உள்பட விவசாயிகளுக்கு சொந்தமானது ஆகும். பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயி களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். காட்டு பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவும், நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிரந்தர தீர்வு தேவை
இதுபற்றி மஞ்சுவிளையை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் (காங்கிரஸ்) சிம்சோன் துரை கூறுகையில், ’பன்றிகள் அட்டகாசத்தால்  வாழைகள் நாசமாகி வருகிறது. விளைநிலங்களுக்குள் புகும் பன்றிகளை விரட்ட முடியாமலும், வாழைகளை பாதுகாக்க முடியாமலும் விவசாயிகள் கடும் துயரத்தில் உள்ளனர். காட்டு பன்றிகள் தொடர்ந்து வாழைகளை துவம்சம் செய்வதால் 24 மணி நேரம் உழைத்தும் விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டு வருகிறது. எனவே அரசு பன்றிகள் அட்டகாசத்தை தடுக்க நிரந்தர தீர்வு காண  வேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.