ஈரோடு: ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் தங்களது பணியை புறக்கணித்து 4வது நாளாக இன்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மை பணியினை தனியார் நிறுவனம் மூலம் அவுட்சோர்சிங் முறையில் மேற்கொள்ள சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் பணியாற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கடந்த 31ம் தேதி முதல் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
4 வது நாள் போராட்ட நிகழ்வாக இன்று தற்காலிக தூய்மை பணியாளர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியேறும் போராட்டம் என அறிவித்து, மாநகராட்சி அலுவலகத்திலேயே உணவு சமைத்து, சாப்பிட்டு மாலை வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர் கதிர் கூறினார். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அசம்பாவித செயல்களில் ஈடுபடாமல் தடுக்க பலத்த போலீசும் போடப்பட்டு உள்ளது.
சுகாதார பணிகள் பாதிப்பு: ஈரோடு மாநகராட்சி 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில், தற்காலிக தூய்மை பணியாளர்கள் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 4 நாட்களாக இவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தேங்கியிருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.