ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. ‘வத்திக்குச்சி’ இயக்குநர் கின்ஸ்லின் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் நவம்பர் 11-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இதையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐஸ்வர்யா, படத்தின் ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போடாமல் தானே நடித்துள்ளதாகவும், அதே சமயம் நயன்தாரா பாணியில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் பேசியுள்ளார்.
இது பற்றிப் பேசிய அவர், “‘க/பெ ரணசிங்கம்’ படத்தை முடித்துவிட்டு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். பின்னர், ‘வத்திக்குச்சி’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கின்ஸ்லி ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் கதையை என்னிடம் சொன்னார். பெண் டாக்ஸி ஓட்டுநரின் கதையை மையப்படுத்திய கதை. கேட்கும்போதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. நான் சமீபத்தில் நடித்திருந்த மூன்று படங்களும் ஓ.டி.டி-யில் வெளியாகியிருந்தன. ஆனால், தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி இப்படத்தைத் திரையரங்கில்தான் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஓ.டி.டி-யில் வரவேற்பு அதிகம். திரையரங்குகளில் அதற்கான வரவேற்பும் இப்போது கொஞ்சம் கம்மிதான். இருப்பினும், வித்தியாசமான தரமான திரைப்படங்களை ரசிகர்கள் ஆதரிக்கவும் வரவேற்கவும் தவறுவதில்லை. அது போன்ற நல்ல திரைப்படம்தான் ‘டிரைவர் ஜமுனா’. நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிற இத்திரைப்படத்தை நம்பிக்கையுடன் வந்து பார்க்கலாம்” என்று கூறினார்.
மேலும், “கார் ஓட்டுவது எனக்குப் பிடிக்கும். அதனால் இப்படத்தின் ஒரே ஒரு காட்சியைத் தவிர மற்ற எல்லா ஸ்டன்ட் காட்சிகளிலும் டூப் போடாமல் நானே நடித்திருக்கிறேன். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாணியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிக்கும் விருப்பம் இல்லை, எல்லா படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். நயன்தாரா பெரிய நடிகை, நான் இப்போதுதான் ஓரிரு திரைப்படங்களில் நடித்து வளர்ந்து வருகிறேன்” என்று கூறினார்.