புதுடெல்லி: எதிரி ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிப்பதில் இந்தியா புதிய உச்சம் தொட்டிருப்பதாக டி.ஆர்.டி.ஓ தலைவர் சமிர் காமத் தெரிவித்துள்ளார்.
5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் AD-1 ஏவுகணை சோதனை, ஒடிசா கடற்பகுதியில் நேற்று நடத்தப்பட்டு, சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதுடெல்லியில் இன்று (நவ. 3) செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான டி.ஆர்.டி.ஓ -வின் தலைவர் சமிர் காமத் கூறியதாவது: “2 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை ஏற்கெனவே வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து, 5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் AD-1 ஏவுகணை சோதனை ஒடிசா கடற்பகுதியில் நேற்று நடத்தப்பட்டது. இந்த சோதனையும் வெற்றி பெற்றுள்ளது.
அதிக உயரத்தில் பறக்கும் ஏவுகணை மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் ஏவுகணை என இரண்டு வகையான ஏவுகணைகளையும் இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது AD-1 ஏவுகணை. இதன்மூலம், நமது தாக்கும் திறன் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. நீர்மூழ்கி கப்பலில் இருந்தும், நீருக்கு வெளியே உள்ள தளங்களில் இருந்தும் இந்த ஏவுகணைகளை செலுத்த முடியும்” என்று சமிர் காமத் தெரிவித்துள்ளார்.