இந்து சமய அறநிலையத் துறையின் நோட்டீசுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக பல்வேறு புகார்கள் வரப்பெற்றதாகவும், அதனால் நீதிமன்ற உத்தரவு நகல், கோயில் வரவு செலவு கணக்குகள், நில உரிமை போன்ற ஆவணங்களை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பொது தீட்சிதர்களின் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், 15ஆம் தேதிக்குள் விவரங்களை அனுப்பவில்லை என்றால் சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை ஆணையரின் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பொது தீட்சிதர்களின் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறைக்கு பதில் அனுப்பி உள்ளார். அதில், சிதம்பரம்
நடராஜர் கோயில் பூஜை மற்றும் நிர்வாக செலவுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் கணக்குகளை தணிக்கை செய்ய முயல்வது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என கூறப்பட்டுள்ளது.
2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலின் நில ஆவணங்கள் தொடர்ச்சியாக கேட்கப்படுவதாகவும், அது பற்றி அரசின் ஆவணப்பதிவுகளை பார்க்குமாறும் பொது தீட்சிதர்களின் செயலாளர் தெரிவித்துள்ளார். அறநிலையத் துறையின் நோட்டீஸ்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்றும் தீட்சிதர்கள் மீது அறநிலையத்துறை நடவடிக்கை அல்லது உத்தரவு பிறப்பித்தால் அது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வழக்கறிஞர்களுடன் சட்ட ஆலோசனை பெற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM