பாலு மகேந்திராவின் `வீடு': காட்சிக் கோர்வை வழியே ஒரு கவிதை; `முருகேசு’ தாத்தாவை மறக்க முடியுமா?

80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘வீடு’.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் – 80s, 90s Cinemas For 2K Kids

தமிழில் யதார்த்த சினிமாவின் முன்னோடிகள் என்று இரண்டு இயக்குநர்களைப் பிரதானமாகச் சொல்லலாம். ஒருவர் மகேந்திரன். இன்னொருவர் பாலு மகேந்திரா. எண்பதுகளில் இவர்கள் ஒரு புதிய அலையை உருவாக்கினார்கள். இதனால் சில உன்னதமான திரைப்படங்கள் அப்போது வெளிவந்தன. ஆனால் ஒரு காலகட்டத்தில் இந்த அலை தொடராமல் அப்படியே அமுங்கிப் போனது துரதிர்ஷ்டம்.

‘இந்த இயக்குநரின் இந்தந்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று ஒரு ரசிகன் சொல்வது வேறு. ‘நான் இயக்கிய படங்களில் எனக்குப் பிடித்தவை’ என்று சம்பந்தப்பட்ட இயக்குநரே சொல்வது வேறு. பின்னது ஸ்பெஷலான அம்சம். அந்த வகையில் “என்னுடைய இயக்கத்தில் எனக்கு மிகவும் திருப்தியளித்தது இரண்டு படங்கள்தான். ‘வீடு’ மற்றும் ‘சந்தியா ராகம்'” என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார் பாலு மகேந்திரா. அவரின் இதர திரைப்படங்களில் சற்றாவது ‘சினிமாத்தன்மை’ இருக்கும். ஆனால் இந்த இரண்டு படங்களும் Docudrama மாதிரி உண்மைக்கு மிக நெருக்கமாகப் பயணிப்பவை. இந்தக் கட்டுரையில் ‘வீடு’ திரைப்படத்தைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

பாலு மகேந்திரா

‘வீடு என்னும் எட்டாத கனவு’

‘சொந்த வீடு’ என்பது ஏறத்தாழ எல்லோருக்கும் இருக்கும் கனவு. குறிப்பாக மிடில் கிளாஸ் மனிதர்கள், இந்த லட்சியத்தை எப்படியாவது எட்டிவிட முடியாதா என்று பல்வேறு வழிகளில் முயன்று முட்டி மோதி தத்தளிப்பார்கள். இந்தத் திரைப்படமும் அப்படியொரு இளம் பெண்ணின் தத்தளிப்பைத்தான் யதார்த்தமான திரைமொழியில் சித்திரிக்கிறது. வீடு கட்டும் கனவு என்பது அவளுக்குள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதும், அதை நோக்கி அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அதில் ஏற்படும் சிரமங்களும் தடைகளும் மிக நுட்பமான காட்சிகளாக அடுக்கப்படுகின்றன. படத்தின் இறுதியில் வரும் ஒரு திருப்பம் பார்வையாளனுக்குள் ஒரு கனமான துயரத்தைக் கடத்திவிடும்.

1987-ம் ஆண்டு ‘International Year of Shelter for the Homeless’ ஆக அனுசரிக்கப்பட்டது. ஏறத்தாழ அதே காலகட்டத்தில் இந்தத் திரைப்படம் வெளியானதைத் தற்செயல் பொருத்தம் என்று சொல்லலாம். ‘உலகமெங்கிலுமுள்ள வீடற்ற மக்களுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்’ என்றுதான் டைட்டில் கார்டு துவங்கும்.

தேசிய விருது வாங்கிய அர்ச்சனா

திருமணம் ஆகாத சுதா, தனது தங்கை இந்து மற்றும் தாத்தா முருகேசனுடன் வாழ்ந்து வருகிறாள். அவள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர், வீட்டைக் காலி செய்யச் சொல்லி வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். எனவே வேறொரு வீட்டை வாடகைக்குப் பார்க்க வேண்டிய சூழல். சென்னையில் வீடு கிடைப்பதென்பது அத்தனை எளிதான சமாச்சாரமாக இல்லை.

“ஏன் இவ்ளோ அவஸ்தைப்படறே… கொஞ்சம் கஷ்டப்பட்டா நீயே சொந்த வீடு கட்டிடலாமே?” என்று சுதாவுடன் அலுவலகத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவர் ஒரு கனவை விதைக்கிறார். ஆரம்பத்தில் தயங்கினாலும் தடுமாறினாலும் மெல்ல மெல்ல அந்தக் கனவை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறாள் சுதா. அவளின் காதலனான கோபி உறுதுணையாக இருக்கிறான். ஒரு கீழ் நடுத்தர வர்க்க ஆசாமி எதிர்கொள்ளும் அத்தனை சிரமங்களையும் சுதா எதிர்கொள்கிறாள். இறுதியில் என்னவாயிற்று… சுதாவின் வீட்டுக் கனவு நிறைவேறியதா?

பாலு மகேந்திராவின் ‘வீடு’ படத்தில் அர்ச்சனா

சுதாவாக அர்ச்சனா. இந்தத் திரைப்படத்திற்காக, ‘சிறந்த நடிகைக்கான தேசிய விருது’ அர்ச்சனாவிற்குக் கிடைத்தது மிகப் பொருத்தம். சுதாவாகத் கூடுமாறி, ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை யதார்த்தமாக நடித்திருக்கிறார். பொதுவாக டைட் குளாசப் காட்சிகளில் நடிப்பது எந்தவொரு நடிகருக்கும் பெரிய சவால். மிக நுண்ணிய உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்த வேண்டும். அந்த வகையில் இந்தத் திரைப்படத்தில் பதிவான அர்ச்சனாவின் வெவ்வேறு முகபாவங்களை ஒரு வீடியோவாகத் தொகுத்தால் அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும். அவரது மூக்கு நுனி கூட நடித்திருக்கிறது எனலாம்.

“எங்களுக்கு வீடு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா வாடகையைக் கொஞ்சம் குறைச்சுக்கங்களேன்” என்று ஹவுஸ் ஓனரிடம் கண்களில் ஏக்கம் வழியக் கெஞ்சுவது, “ஏன்… என்கிட்ட பணத்தை வாங்கிக்கிட்டா குறைஞ்சு போயிடுவியா?” என்று காதலன் கோபத்தில் வெடிக்க, திகைத்துப் போய் கண் கசிவது, தாத்தாவின் மரணத்தை எண்ணி வீட்டின் மூலையில் அமர்ந்து பெருங்குரலில் அழுவது எனப் பல காட்சிகளில் அர்ச்சனாவின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது.

சொக்கலிங்க பாகவதர் என்னும் ‘முருகேசு’ தாத்தா

சொக்கலிங்க பாகவதர் ஓர் இசை நாடக நடிகர். காளி என்.ரத்னத்தால் பாராட்டப்படும் அளவிற்குக் குரல் வளமும் இசை ஞானமும் கொண்டவர். முப்பதுகளில் ‘ரம்பையின் காதல்’ உள்ளிட்ட, சில ஆரம்பக் கால திரைப்படங்களில் நடித்தாலும் பிறகு நீண்ட இடைவெளி விழுந்தது. ‘வீடு’ திரைப்படத்தின் மூலம்தான் இவர் பரவலான கவனத்திற்கு உள்ளானார்.

இந்தத் திரைப்படத்தின் ‘ஹீரோ’ என்று சொக்கலிங்க பாகவதரைச் சொல்லலாம். எண்பது வயது முதியவரைப் பிரதான பாத்திரமாக வைத்துப் படமெடுக்க பாலு மகேந்திரா போன்றவர்களால்தான் முடியும். பேத்திகளின் மீது பிரியத்தைக் கொட்டும் ‘முருகேசு’ என்கிற தாத்தாவாக வாழ்ந்திருந்தார் சொக்கலிங்க பாகவதர். புதிய வீடு உருவாகி வருவதைக் காண்பதற்காக ஆவலும் பரவசமுமாய் இவர் செல்லும் காட்சிக் கோர்வையை ‘ஒரு மினி குறும்படம்’ எனலாம். அத்தனை உணர்ச்சிகள் அதிலிருந்தன.

‘வீடு’ படத்தில் முருகேசு தாத்தாவாக நடித்த சொக்கலிங்க பாகவதர்

வானத்தைப் பார்த்துவிட்டு குடையை எடுத்துக் கொள்வது, மெல்ல நடந்து பேருந்தில் ஏறுவது, அமர இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டு வரும் கிழவருக்கு ஒரு சிறுமி இடம் தருவது, அந்தச் சிறுமியைப் பார்த்து தாத்தா புன்னகைப்பது, அமர்ந்தவுடன் அப்படியே அசதியில் தூங்கி விடுவது, நடத்துநரால் உசுப்பப்பட்டு இறங்குவது, குடையைப் பேருந்திலேயே மறந்து வைத்ததை அடுத்த கணத்தில் நினைவுகூர்ந்து உடல் பதறுவது, களைப்புடன் நடந்து சென்று உருவாகி வரும் கட்டடத்தின் அருகில் சென்று சேர்வது, பிறந்த குழந்தையைப் போல அதைப் பரவசத்துடன் பார்ப்பது, படியில் செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு மெல்ல ஏறுவது (எத்தனை நுணுக்கம் பாருங்கள்!), ஒவ்வொரு அறையாகச் சென்று சுவரைத் தடவிப் பார்ப்பது, மங்கம்மா கொண்டு வரும் தண்ணீரைக் களைப்பு தீரக் குடிப்பது…

ஒரு சீனை எப்படி ஆரம்பித்து எப்படி முடிக்க வேண்டும் என்பதற்குக் கச்சிதமான உதாரணமாக இந்தக் காட்சிக் கோர்வையைச் சொல்லலாம். அத்தனை இயல்பு. அத்தனை யதார்த்தம். படம் முழுவதையுமே இப்படிப்பட்ட நுணுக்கங்களால் அலங்கரித்து வைத்திருந்தார் பாலு மகேந்திரா. இது மட்டுமல்ல, சொக்கலிங்க பாகவதர் வரும் பல காட்சிகள் இப்படி இயல்பான சுவாரஸ்யங்களால் நிறைந்திருந்தன.

எஸ்.எஸ்.ராமன், பானுசந்தர், ‘பசி’ சத்யா – திறமைசாலியான நடிகர்கள்

‘இப்படிப்பட்ட ஒரு காதலன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என்று ஒவ்வொரு இளம் பெண்ணும் ஏங்குமளவிற்கான பாத்திரத்தை பானுசந்தர் ஏற்றிருந்தார். வீடு கட்டும் சுதாவிற்கு முழு ஆதரவைத் தருவதோடு அவரது சிரமங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஆண். வரதட்சணை எதிர்பார்க்காதது மட்டுமல்ல, தன்னுடைய தங்கைகளின் திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தைக் கூட, இக்கட்டான நிலையில் சுதாவிற்குத் தரும் அளவிற்குக் கண்ணியவான். சுதா அதை மறுக்கும் போது கோபித்துக் கொள்ளும் அளவிற்கு நல்லவர். ‘கோபி’ என்கிற இந்தப் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் பானுசந்தர்.

‘நாயர்’ ராமன் என்னும் அதிதிறமைசாலியான நடிகர் இந்தப் படத்தில் நடித்திருந்தார். பாலசந்தரின் நண்பரான இவர், ‘எதிர்நீச்சல்’ நாடகத்தில் ‘நாயர்’ பாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்தது பலரைக் கவர்ந்ததால் இந்த அடைமொழி அவருடைய பெயருடன் ஒட்டிக் கொண்டது. ‘எதிர்நீச்சல்’ நாடகம் பிறகு திரைப்படமாக வெளிவந்த போது முத்துராமன் இந்தப் பாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டதால் ராமன் மனமுடைந்தார்.

பாலு மகேந்திராவின் ‘வீடு’ படத்தில் பானு சந்தர், அர்ச்சனா

‘வீடு’ திரைப்படத்தில், “சொந்த வீடு கட்டறது அப்படியொன்னும் மலையைப் புரட்டிப் போடற கஷ்டம் இல்ல பார்த்தியோ…” என்று ஆரம்பித்து வீடு கட்டும் கனவை அர்ச்சனாவிடம் விதைக்கும் காட்சி இருக்கிறதே?! இதில் ராமனின் உடல்மொழி, வசன உச்சரிப்பு, முகபாவம் ஆகிய பல விஷயங்களைக் கவனித்தால் பிரமிப்பாக இருக்கும். அத்தனை சிறப்பான நடிப்பு. ‘இப்படியொரு ஆசாமி நம் கூட இருந்தால் நாம் கூட வீடு கட்டி விடலாம் போலிருக்கிறதே?’ என்னும் அளவிற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவார். இந்தப் படத்தில் ‘ஐயங்கார்’ என்கிற பாத்திரத்தில் நடித்ததோடு உதவி இயக்குநராகவும் பணிபுரிந்த ராமனின் ஆலோசனைகளை பாலு மகேந்திரா மரியாதையுடன் கவனிப்பார். ராமன் அந்த அளவிற்குக் கதை ஞானம் உள்ளவர்.

இந்தப் படத்தில் அசத்திய இன்னொரு நடிகையைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். ‘பசி’ சத்யா – சிரமப்பட்டு வீடு கட்டும் அர்ச்சனாவிடமிருந்து சிமெண்ட் மூட்டைகளைத் திருடி விற்கும் கான்ட்ராக்ட்டரை அம்பலப்படுத்தி வார்த்தைகளால் இவர் ‘ரவுண்டு’ கட்டி அடிக்கும் காட்சி இருக்கிறதே?! அட்டகாசம். சென்னை வழக்குமொழியில் பின்னியெடுத்திருப்பார். இதைப் போலவே தனக்குப் புடவை கொண்டு வந்து தரும் அர்ச்சனாவிடம் கண்கலங்கி தன்னுடைய பிளாஷ்பேக் கதையைச் சொல்லும் காட்சியிலும் சிறப்பாக நடித்திருப்பார். வீடு கட்டும் உரிமையாளர், சித்தாள் என்பதைத் தாண்டி அர்ச்சனா – சத்யாவின் உறவு அத்தனை அருமையாகப் பதிவாகியிருக்கும்.

கான்ட்ராக்டராக நடித்திருப்பவரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. அவர் மிகச் சிறந்த நடிகர். மேஸ்திரியாக வரும் ஒருவிரல் கிருஷ்ணாராவும் இயல்பாக நடித்திருப்பார். மறைமுகமாக லஞ்சம் கேட்கும் கிளார்க் பாத்திரத்தில் வீரராகவன் அசத்தியிருப்பார். “விலைவாசில்லாம் பயங்கரமா ஏறிட்டுது… மொளகா… என்ன விலை விக்குதுன்றீங்க…” என்று சொல்லும் மாடுலேஷன் ரசிக்க வைப்பதாக இருக்கும். இவரின் தவற்றைக் கண்டிக்கும் மூத்த அதிகாரியாக இறுதிக்காட்சியில் வருவார் செந்தாமரை.

இதுதவிர பாகவதரின் பக்கத்து வீட்டுக்காரரான ‘காம்ரேட்’ மேனன், ‘என்ன தாத்தா… இழுத்து இழுத்து பாடறீங்க. பொன்மேனி உருகுதே…. பாடுங்க” என்று சலித்துக் கொள்ளும் சிறுமி, அர்ச்சனாவின் தங்கையாக நடித்த இந்து என்று அனைத்து சின்ன சின்ன பாத்திரங்களும் அத்தனை இயல்பாகப் பங்களித்திருப்பார்கள்.

பாலு மகேந்திராவின் ‘வீடு’ படத்தில் சொக்கலிங்க பாகவதர்

பாலா பணிபுரிந்த முதல் திரைப்படம் – வீடு

இயக்குநர் பாலா முதன் முதலில் பணிபுரிந்த படம் ‘வீடு’ என்பது பலருக்குத் தெரியாத விஷயம். ஆம், இயக்குநர் பாலு மகேந்திராவிற்கே தெரியாத விஷயமாக அப்போது இருந்தது. கவிஞர் அறிவுமதி இந்தப் படத்தில் உதவி இயக்குநராக இருந்தார். அவரின் வழிகாட்டுதலில் படப்பிடிப்பிற்குள் வந்த பாலா, பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார். பாலாவின் உழைப்பையும் ஆர்வத்தையும் கவனித்த பாலு மகேந்திரா, ‘சந்தியா ராகம்’ படத்தில் உதவி இயக்குநராக பாலாவை இணைத்துக் கொண்டார்.

அர்ச்சனா பணிபுரியும் அலுவலகத்தின் உயர் அதிகாரியாக நடித்தவர் ரால்லபள்ளி. இவர் தெலுங்கு நடிகர். தெலுங்கு வாசனையடிக்கும் தமிழில் “நீ என்ன உதவி வேணும்னா கேளும்மா… நான் இருக்கேன்…” என்று தேனொழுகப் பேசி விட்டு மகாபலிபுரம் கெஸ்ட் ஹவுஸிற்கு மறைமுகமாக அழைத்து அதிர்ச்சியை ஏற்படுத்துவார். சிறிய காட்சியில் வந்தாலும் சிறப்பாக நடித்திருப்பார். இயல்பாக நடிக்கக்கூடியவர்களை பாலு மகேந்திரா தேர்ந்தெடுத்தாரா அல்லது பாலு மகேந்திராவின் இயக்கம் காரணமாக அவர்கள் இயல்பாக நடித்தார்களா என்பது ஆராய்ச்சிக்கு உரிய விஷயம்.

‘வீடு’ திரைப்படத்திற்கு இளையராஜாவின் இசை உபயோகப்படுத்தப்பட்டது. ஆம், இளையராஜாவால் நேரடியாகப் பின்னணி இசை அமைக்க முடியாத சூழலில், ராஜாவின் அனுமதியுடன் அவர் உருவாக்கிய இசை ஆல்பமான ‘ஹவ் டூ நேம் இட்’ என்னும் தொகுப்பிலிருந்து பொருத்தமான இசைக் கோர்வைகளைப் பயன்படுத்தினார் பாலு மகேந்திரா. சுதாவின் குடும்பம் வாடகைக்கு வீடு தேடி அலையும் காட்சிகள், கிழவர் புதுக் கட்டடத்தைப் பரவசமாகப் பார்க்கும் காட்சிகள் போன்றவற்றில் ராஜாவின் உன்னதமான இசையைப் பயன்படுத்தி அவற்றின் உணர்வுகளைப் பார்வையாளனுக்கும் கடத்தினார் பாலு மகேந்திரா.

பாலு மகேந்திரா, இளையராஜா

மான்டேஜ், ஜம்ப்கட்ஸ் என்னும் தவளைப்பாய்ச்சல் உத்தி ஆகியவற்றின் மூலம் காட்சிகளைக் கச்சிதமாக நகர்த்திச் சென்றார் இயக்குநர். திரைக்கதை, வசனம், எடிட்டிங், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் ஆகிய அத்தனை பொறுப்புகளையும் பாலு மகேந்திரா ஏற்றார். இதற்கான கதையை எழுதியவர் இயக்குநரின் மனைவியான அகிலா மகேந்திரா.

பட்டுப்பாவாடையும் தங்கையின் கண்ணீரும்

இந்தத் திரைப்படத்தில் வரும் பல காட்சிகள் நம்முடைய அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருந்தன. வாடகைக்கு வீடு பார்க்கும் போது ‘இந்த ரூம் என்னுது’ என்று அப்போதே சொல்லி விடுவாள், சுதாவின் தங்கை. பிறகு சொந்த வீட்டிற்கான பிளான் போடும் போது ‘எனக்குத் தனி ரூம் வேணும்’ என்று அவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள, பொருளாதாரப் பளுவையும் பார்க்காமல் அதை ஏற்றுக் கொள்வாள் அக்கா சுதா. பல சிரமங்களுக்கு இடையில் வீடு கட்டும் செலவுகளை சுதா மேற்கொள்ள, பள்ளியின் விழாவிற்குச் செல்ல பட்டுப் பாவாடை கேட்டு அடம்பிடிப்பாள் தங்கை. அப்போதைய உளைச்சல் காரணமாகத் தங்கையைக் கடிந்து கொள்வாள் சுதா. ஆனால் தங்கை வீடு திரும்புவதற்குள் புதிய பாவாடையை வாங்கி வைப்பதும், அதைப் பார்த்து விட்டு கண்ணீருடன் அக்காவைத் தங்கை கட்டிக் கொள்வதும் உணர்ச்சிகரமான காட்சிகள். இந்தத் திரைப்படத்தில் அறிமுகமான இந்து சிறப்பாக நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகவே ஒரு கட்டடம் கட்டப்பட்டு மெல்ல மெல்ல வளர்ந்தது. படம் நிறைந்தும் கூட பொருளாதாரக் காரணங்களால் அது கட்டி முடிக்கப்படாமல் இருந்ததை ஒரு தற்செயல் துயரமாகச் சொல்லலாம். பிறகு இந்தக் கட்டடம் நிறைவடைந்து இப்போது ‘பிலிம் இன்ஸ்டிடியூட்’ ஆகச் செயல்பட்டு வருவதை ‘வீடு’ திரைப்படத்தின் நினைவுச் சின்னம் என்று சொல்லலாம்.

பாலு மகேந்திராவின் ‘வீடு’

‘வீடு’ திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றது. சிறந்த நடிகைக்கான தேசிய அளவிலான விருது அர்ச்சனாவிற்குக் கிடைத்தது. பிராந்திய மொழிகளின் வரிசையில் ‘சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான’ விருதும் கிடைத்தது. திரையரங்குகளில் போதிய வரவேற்பு பெறாவிட்டாலும், திரைப்பட விழாக்களிலும் திரைப்பட ஆர்வலர்களின் இடையிலும் விமர்சன ரீதியான பாராட்டுக்களைப் பெற்றது.

‘சொந்த வீடு’ என்னும் கனவை எட்டுவதற்காக நடுத்தர வர்க்க மக்கள் எத்தனை சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்னும் வாழ்வியல் அனுபவத்தை இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறது. ‘தண்ணீர் என்பது காசு கொடுத்து வாங்கப் போகும் ஒரு பொருளாக மாறப் போகிறது’ என்பதற்கான தடயங்களை ‘வீடு’ திரைப்படத்தின் மூலம் எண்பதுகளிலேயே பேசியிருப்பார் பாலு மகேந்திரா. அப்போதைய சென்னையின் சாலைகள், பேருந்துகள் போன்றவற்றை இதில் கவனிப்பது சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்.

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த படைப்புகளில் தவிர்க்கவே முடியாத திரைப்படம் என்று ‘வீடு’ படத்தை உத்தரவாதமாகச் சொல்லலாம். சமகால பார்வையாளர்கள் தவற விடக்கூடாத படமும் கூட!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.