டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் பிரதமர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அத்தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று மீண்டும் பிரதமராகிறார் பெஞ்சமின் நெதன்யாகு. இதனையடுத்து காபந்து அரசின் பிரதமராக இருந்த யாயிர் லாபிட் தனது வாழ்த்துகளை நெதன்யாகுவுக்கு தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவிக்க நெதன்யாகு ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலில் அண்மையில் தேர்தல் நடந்தது. 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை தேர்தலில் பதிவான 99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு விட்டதாக மத்திய தேர்தல் குழு தெரிவித்துள்ளது. அதன்படி நெதன்யாகுவின் லிக்குட் கட்சி 64க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இஸ்ரேலில் நடக்கும் 5வது தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை அடுத்து மீண்டும் நெதன்யாகு பிரதமராகும் சூழல் உருவாகியுள்ளது. இவர் ஏற்கெனவே 1996 முதல் 1999 வரையிலும் 2009ல் இருந்து 2021 வரையிலும் இஸ்ரேலின் பிரதமராக இருந்துள்ளார்.
இந்நிலையில் தற்போதைய பிரதமர் லாபிட் அலுவலக வெளியிட்டுள்ள அறிக்கையில், பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வாழ்த்துகள். இன்னும் ஓரிரு நாட்களில் அதிகார மாற்றத்தை முறையாக செய்துமுடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதன்யாகுவின் கட்சி லிகுட் கட்சி. இக்கட்சியுடன் கூட்டணியில் பல்வேறு யூத கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி தீவிர வலதுசாரி கூட்டணியாகப் பார்க்கப்படுகிறது. ரிலீஜியஸ் ஜயானிஸம் என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் 14 மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரவிருக்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு. 73 வயதான நெதன்யாகு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த வழக்குகள் வரும் திங்களன்று விசாரணைக்கு வருகிறது.