கூடுவாஞ்சேரி அடுத்துள்ள கோதண்டராமன் நகரில், இன்று அதிகாலை ஃபிரிட்ஜ் வெடித்த விபத்தில் மூன்று பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனை அடுத்து, அவருக்கு திதி கொடுப்பதற்காக, துபாயில் வசித்து வந்த வெங்கட்ராமனின் மனைவி கிரிஜா(63), அவரது தங்கை ராதா(55), அவரது தம்பி ராம்குமார்(47), ராம்குமாரின் மனைவி பார்கவி (35) மற்றும் அவருடைய மகள் ஆராதனா (6) ஆகியோர் கடந்த 2-ம் தேதி ஊரப்பாக்கம் வந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஆர்ஆர் பிருந்தாவன் அப்பார்ட்மென்டில் உள்ள முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது இன்று அதிகாலை நான்கு மணியளவில் எதிர்பாராத விதமாக வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி வெடித்தது. இதன்காரணமாக அதிலிருந்து வெளியேறிய புகையால் தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் அலறி அடித்து கூச்சலிட்டுள்ளனர். கூச்சல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததுது மூச்சுத் திணறி கிரிஜா, ராதா, ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், மூன்று பேரின் உடலையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்கவி மற்றும் ஆராதனா ஆகிய இருவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பிரிட்ஜ் வெடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.