ஜியோ நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து, தனக்கு உரிய இழப்பீடை பெற்றுள்ளார் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நபரொருவர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த பொறியாளர் செந்தில்குமரன் என்பவர், ஜியோ நிறுவனத்திடம் இண்டர்நெட் இணைப்பு பெற்றுள்ளார். இன்டர்நெட் இணைப்பு வழங்கும்போது ஜியோ நிறுவனம் செந்தில் குமரனுக்கு அமேசான் பிரேம் மற்றும் ஓ டி டி ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் அவ்வாறு இலவசமாக வழங்கப்படவில்லை என்பதால் ஜியோ நிறுவனத்திடம் செந்தில்குமரன் புகார் செய்துள்ளார்.
புகாரையடுத்து ஜியோ நிறுவனத்தின் பணியாளர் செந்தில்குமரனின் இண்டெர்நெட் ப்ளானை, ஆய்வு செய்தபோது, அவருக்கு இன்டர்நெட்டில் 4G இணைப்பு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என்பதும், 5G இணைப்பு கொடுத்தால் மட்டுமே இலவசமாக வழங்கப்படும் – அப்போதே அமேசான் பிரேம் மற்றும் ஓ டி டி கிடைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. இதன்பின்னரும், மூன்று மாத காலமாக ஜியோ நிறுவனம் செந்தில்குமரனுக்கு 5g இணைப்பினை வழங்கவில்லை என செந்தில்குமரன் தரப்பில் கூறப்படுகின்றது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செந்தில்குமரன், திருநெல்வேலி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர், மனுதார்க்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 10,000, வழக்குச் செலவு ரூ. 2000, மனுதாரர் 3 மாதமாக செலுத்திய கட்டணத் தொகை ரூ.3,536.46, மற்றும் வழக்கு தாக்கல் செய்த நாள் முதல் 6 சதவீத வட்டி ஆகியவற்றை சேர்த்து வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவ்வாறாக தனக்குரிய நஷ்ட ஈடை பெற்றுள்ளார் நெல்லையை சேர்ந்த அவர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM