ஆபாச பேச்சு சாதிக்கை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் – குஷ்பு காட்டம்

அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் அண்மையில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக நிர்வாகியான சைதை சாதிக் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பற்றி ஆபாசமாக பேசினார். அவரது பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் அவரை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதாகி விடுதலையானார். இந்தச் சூழலில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கும்வரை ஓயப்போவதில்லை என்று அறிவித்த குஷ்பு இன்று டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்று ஆணைய தலைவி ரேகா ஷர்மிளாவிடம் நேரில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் சைதை சாதிக்கின் பேச்சுக்கான வீடியோ ஆதாரத்தையும் இணைத்து கொடுத்துள்ளார்.

குஷ்பு தனது புகாரில் அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “எனக்கே இந்த கதி என்றால் மற்ற பெண்களுக்கு தமிழகத்தில் என்ன கதி ஏற்படும்? அமைச்சர் பொறுப்பில் இருக்கும் மனோ தங்கராஜ் தூங்கி விழித்து 4 நாள்கள் கழித்து நான் விளம்பரம் தேடுவதாக கூறியிருக்கிறார். அதை கேட்டதும் சிரிப்புதான் வந்தது.

எனக்கு இனி விளம்பரம் தேவையில்லை. நானும், அவரும் பொது வெளியில் நின்றால் அவரை எத்தனை பேருக்கு அடையாளம் தெரியும்? அவருக்குத்தான் இப்போது விளம்பரம் தேவை. அவரது தலைமையில் நடந்த கூட்டத்தில்தான் இவ்வளவு அநாகரீகமாக பேசியுள்ளனர். அதை கேட்டு சிரித்துக்கொண்டிருந்த அமைச்சர் தனியாக அழைத்து கண்டித்ததாக கூறுகிறார். உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை இப்படி விமர்சித்து விட்டு தனியாக அழைத்து கண்டித்தால் ஏற்பீர்களா? 

என்னிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. எனக்கு மன்னிப்பும் தேவையில்லை. நடவடிக்கைதான் தேவை. அமைச்சர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சைதை சாதிக்கை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். இது தொடர்பாக டெல்லியில் தேசிய பெண்கள் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறேன். என்னைப் பற்றி பேசியவர் மீதும் அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் புகார் அளித்துள்ளேன். என்னை பற்றி பேசிய பேச்சை மனோ தங்கராஜ் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.