செயலின்றிக் கிடக்கும் பொருளாதார மத்திய நிலையங்களை செயற்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை பிரதேச விவசாயிகளும் மக்களும் நன்மையடையும் வகையில் செயற்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தினை  மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் தொடர்புபட்ட அதிகாரிகளுடன் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் புதிதாக 200 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள கடைகளைக் கொண்ட பொருளாதார மத்திய நிலையத்திற்கான நிர்வாகத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் உருவாக்குவதுடன், எதிர்வரும் தைப்பொங்கல் பண்டிக்கைக்கான வியாபார செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் அதனைத் திறந்து வைப்பதற்கு தீர்மானிக்கப்ட்டுள்ளதுடன், அதற்கு முன்னர் பூரணப்படுத்தப்பட வேண்டிய பணிகளையும் பூர்த்தி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர், சந்தையின் தற்போதைய நிலைவரங்கள் நேரடியாக பார்வையிட்டனர்.

அதன்பின்னர், குறித்த சந்தைத் தொகுதியை சிறப்பாக செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

thumbnail 3இதன்போது, கிராமிய பொருளாதார அமைச்சும் கரைச்சி பிரதேச சபையும் இணைந்து அனைத்து தரப்பினரும் நன்மையடையும் வகையில், கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான, பொறிமுறையை வகுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கரைச்சி பிரதேச சபையின் எதிர்பார்ப்புக்களை ஒருவார காலத்தினுள் சமர்ப்பிதற்கு பிரதேச சபையின் தலைவர் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு வாரங்களில் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை செயற்படுத்துவதற்கான தீர்மானகரமான கூட்டத்தை கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையமானது 40 கடைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும் நிலையத்தின் அமைவிடம், போக்குவரத்து குறைபாடு, பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தையில் மொத்த வியாபாரமும் மேற்கொள்ளப்படுகின்றமை உட்பட பல்வேறு காரணங்களினால், பொருளாதார மத்திய நிலையத்தினால் உரிய பலனை பெறமுடியாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையிலேயே இன்றைய (03) கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு: கடற்றொழில் அமைச்சர் – 03.11.2022

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.