வரும் பொங்கல் பண்டிகை தென்னிந்திய ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைய உள்ளது. சுமார் 9 ஆண்டுகள் கழித்து, அஜித் – விஜய் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் களமிறங்குகின்றன.
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகி வரும் ‘துணிவு’ திரைப்படமும், தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில், விஜய் நடிக்கும் ‘வாரிசு‘ திரைப்படமும் வரும் பொங்கல் அன்று வெளியாவது உறுதியாகியுள்ளது. ‘துணிவு‘ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும், டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘வாரிசு’ திரைப்படத்தின் 90 விழுக்காடு பணிகள் நிறைவடைந்ததாகவும் தெரிகிறது. மேலும், பொங்கலுக்கு ஏறத்தாழ 50 நாள்கள் உள்ள நிலையில், இத்திரைப்படங்கள் தீவிரமாக தயாராகி வருகிறது.
மேலும், இந்த திரைப்படங்களுடன், ‘பாகுபலி’ புகழ் பிரபாஸ் நடிப்பில் பான் இந்திய தயாரிப்பாக உருவாகும் ‘ஆதிபுருஷ்‘ திரைப்படமும் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆந்திரா, தெலங்கானாவில் அந்த சமயம் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படும் வேளையில் இத்திரைப்படத்தை களமிறக்க படக்குழு திட்டமிட்டிருந்தது.
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராமயணத்தை அடிப்படையாக உருவாகும் இத்திரைப்படத்தின் கிராப்கிஸ் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், இதை ஜனவரியில் நிறைவுசெய்வது சிரமம் என்ற காரணத்தினால் அத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்க படக்குழு தற்போது முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபாஸ் உடன் கிருத்தி சனோன் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோர் லீட் ரோலில் நடித்திருக்கும் இந்த படத்தின் டீசருக்கு சோஷியல் மீடியாகவில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. மீம்ஸ் மற்றும் டிரோல்கள் பறந்தன. சிலர் படத்தின் டீசரை வரவேற்றாலும், தரமற்ற சிஜி மற்றும் விஎப்எக்ஸ் எபெக்டுகளை ரசிகர்கள் விளாசி தள்ளினர். வீடியோ கேம்களைப் போல் படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகள் இருப்பதாக சாடினர். ஆன்லைன் விமர்சனங்களை கருத்தில்கொண்டும், கிராபிக்ஸை மெருகூட்டவும் இயக்குநர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இதனால், ‘ஆதிபுருஷ்’ அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ‘ஆதிபுருஷ்’ அடுத்தாண்டு கோடையில் வெளியானால், கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் உடன் பிரபாஸ் நடித்த ‘சலார்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியும் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.
எனவே, துணிவு – வாரிசு – ஆதிபுருஷ் என்ற மும்முனை போட்டி, வழக்கம்போல் துணிவு – வாரிசு என இருமுனையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.