மும்பை மாகாணம் 1957ல் முதல் தேர்தலை சந்தித்த நிலையில், அதன்பிறகு குஜராத் மாநிலம் தனியாக பிரிந்தது. இதையடுத்து 1962ல் தனக்கென முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. அந்த காலகட்டத்தில்
காங்கிரஸ்
மட்டுமே எழுச்சியுடன் இருந்ததால் 154 சட்டமன்ற தொகுதிகளில் 113ல் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. ஜிவ்ராஜ் நாராயண் மெகதா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 1967ல் நடந்த இரண்டாவது தேர்தலில் 168 தொகுதிகளில் 93 என காங்கிரஸ் சற்றே சரிவை சந்தித்தது. அப்போது ஸ்வதந்திரா கட்சி (66) பலமான போட்டியை அளித்தது.
காங்கிரஸின் ஹிதேந்திர கன்னையலால் தேசாய் முதல்வரானார். இந்த தேர்தலில் தான் பாரதிய ஜன சங்கம் (BJS) முதல்முறை போட்டியிட்டு ஒரேவொரு தொகுதியில் வென்றது. இந்த கட்சியே பின்னாளில் பாரதிய ஜனதா கட்சி (BJP) எனப் பெயர் மாற்றம் பெற்றது. பின்னர் 1972ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. 140 தொகுதிகளில் வென்று அசத்தியது. கன்ஸ்யாம் சோட்டாலால் முதல்வரானார். 1975ல் நடந்த தேர்தலில் பெரும் வீழ்ச்சி கண்டது காங்கிரஸ். 182 தொகுதிகளில் 75ல் மட்டும் வெற்றி பெற்றது.
ஏனெனில் அந்த காலகட்டத்தில் தான் நாடு முழுவதும் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. இது மாநில அளவில் நடந்த தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாபுசாய் படேல் முதல்வராக பதவியேற்க ஆட்சி கலைந்து இருமுறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. இந்த சூழலில் முதல்முறை ஜனதா கட்சி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தது. பின்னர் 1980ல் நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு குஜராத்தில் எழுச்சி கண்டது காங்கிரஸ். 141 தொகுதிகளில் வென்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அப்போது மாதவ் சிங் சோலங்கி முதல்வரானார்.
இந்த தேர்தலில் தான் பாஜக முதல்முறை களம் கண்டு 9 தொகுதிகளில் வென்றது. 1985ல் நடந்த தேர்தலில் புதிய உச்சம் தொட்டது காங்கிரஸ். மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 149 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்த சாதனையை பாஜகவால் கூட இன்னும் முறியடிக்க முடியவில்லை. 85ல் நடந்த தேர்தலில் பாஜக 11 இடங்களில் வென்றது. 1990ல் நடந்த தேர்தலில் ஜனதா தள் வருகையால் காங்கிரஸ் ஆட்டம் கண்டது. பாஜக எழுச்சி அடைந்தது. ஜனதா தள் 70, பாஜக 67, காங்கிரஸ் 33 இடங்களில் வெற்றி பெற்றது.
1995ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 121 தொகுதிகளில் வென்று முதல்முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. கேசுபாய் படே முதல்வராக பதவியேற்றார். காங்கிரஸ் 45 இடங்களில் வென்றது. இதன்பிறகு பாஜகவே தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. 1998ல் நடந்த தேர்தல் பாஜக 117, காங்கிரஸ் 53 இடங்களில் வென்றது. சற்றே அதிக தொகுதிகளில் வென்றாலும் பெரிய அளவில் காங்கிரஸால் எழுச்சி காண முடியவில்லை.
2002ல் நடந்த தேர்தல் பாஜக 127, காங்கிரஸ் 51 என வெற்றி வாகை சூடின. 2007 தேர்தலில் பாஜக 117, காங்கிரஸ் 59 இடங்களில் வென்றன. 2012 சட்டமன்ற தேர்தலில் பாஜக 115, காங்கிரஸ் 61 என வெற்றி பெற்றது. கடைசியாக நடந்த 2017 தேர்தலில் பாஜக 99, காங்கிரஸ் 78 தொகுதிகளில் வென்றது. கடைசி நான்கு தேர்தல்களில் காங்கிரஸ் படிப்படியாக எழுச்சி அடைந்து வந்திருக்கிறது.
இதனால் இம்முறை காங்கிரஸ் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தன்வசமுள்ள 78 உடன் கூடுதலாக 14 தொகுதிகளில் வென்றால் ஆட்சிக் கட்டிலில் அமர முடியும். ஆனால் ஆம் ஆத்மியின் வருகை நெருக்கடியான சூழலை ஏற்படுத்தி தந்துள்ளது. எனவே காங்கிரஸின் எழுச்சி பெறுமா? இல்லை வாக்குகள் பிளவுபடுவதால் சரிவை சந்திக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.