சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் இதுவரை 23 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நேற்று (நவ.3ம் ) 38 மாவட்டங்களில் 14.52 மி.மீ மழை பெய்துள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் மிக அதிக மழை (55.96 மி.மீ) பெய்துள்ளது. இதன்படி தண்டையார்பேட்டை மருத்துவமனையில் 139.4 மீமீ, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக பகுதியில் 122.8 மி.மீ, கோவை மேட்டுப்பாளையத்தில் 120.05 மிமீ பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 23 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இன்று (நவ.3) உயிரிழப்பு ஏதுமில்லை. நேற்று (நவ.3) பெய்த கனமழையின் காரணமாக 18 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 101 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக 56 மரங்கள் விழுந்துள்ளன. இவற்றில் 54 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சிய 2 மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 763 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன. மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் 168 நீர் இறைப்பான்கள் பயன்படுத்தப்பட்டு மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
191 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 3 நிவாரண மையங்களில் 120 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 25,000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படையில் 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையில் 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 336 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. அதில் 207 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. 129 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பாக வரப்பெற்ற மொத்தம் 184 தொலைபேசி அழைப்புகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், 49 அழைப்புகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கத்தில் 20.98 கன அடி நீர் இருப்பு உள்ளது. 642 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 233 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. புழல் ஏரியின் 18.76 கன அடி நீர் இருப்பு உள்ளது. 1310 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.