திருவண்ணாமலை அருகே, டாஸ்மாக் மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.30,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த அப்துல்லாபுரத்தில் அரசின் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் சதாசிவம் என்பவர் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு வியாபாரம் முடித்து கடையை பூட்டிவிட்டுச் சென்றார்.
இந்த நிலையில், இன்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு இருப்பதைக் கண்டு சூப்பர்வைசர் சதாசிவத்திற்கு தகவல் தெரிவித்தனர். சதாசிவம் இது குறித்து தூசி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, நள்ளிரவில் யாரோ சிலர் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று அங்கு இருந்த ரூ.30,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையடித்துச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.