புதுடெல்லி: இந்தியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் ரிசாட்-2, 13.5 ஆண்டுகள் சேவையாற்றியபின், கடந்த மாதம் 30-ம் தேதி அன்று கட்டுப்பாட்டை இழந்து இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப்பின், எல்லைகளில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், உளவு பணிக்காகவும் ரிசாட்-2 என்ற உளவு செயற்கை கோள் உருவாக்கப்பட்டு, கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி பிஎஸ்எல்வி-சி 12 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 300 கிலோ எடையுடன் கூடிய இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டபாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இது நாட்டின் முதல் பிரத்யேக கண்காணிப்பு செயற்கை கோள் ஆகும்.
ரிசாட்-2 செயற்கை கோளை ஏவியபோது, அதில் 30 கிலோ எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது. 4 ஆண்டுகள் சேவையாற்றும் விதத்தில் இந்த செயற்கை கோள் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், சுற்றுவட்டபாதையில் இந்த செயற்கைக்கோள் முறையாக பராமரிக்கப்பட்டதால், 13 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக செயல்பட்டு தேவையான தரவுகளை வழங்கி வந்தது. கடந்த மாதம் 30-ம் தேதி ரிசாட்-2 செயற்கை கோள் கட்டுப்பாட்டை இழந்து பூமி நோக்கி திரும்பியது. இது இந்தோனேசியா அருகே இந்திய பெருங்கடல் பகுதியில் நள்ளிரவு 12.06 மணியளவில் எரிந்து விழுந்தது. இந்த செயற்கைக்கோள் பூமியில் மேற்பரப்பில் மீண்டும் நுழைந்தபோது அதில் எரிபொருள் எதுவும் இல்லை என இஸ்ரோ தெரிவித்தது.