சென்னை: தமிழக தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 24 ஆண்டுகளாக இரண்டாவது விமான நிலையம் குறித்து பேசப்பட்டாலும், தற்போதுதான் அதற்கான அமைவிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதை மத்திய விமான போக்குவரத்துக்கு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
தொழில்நுட்ப ரீதியில் விமான நிலையம் அமைய சாத்தியமான இடங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டதுதான் பரந்தூர். தமிழக தொழில் வளர்ச்சிக்கு 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம். பரந்தூரில் ரூ.20,0000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டிற்குள் விமான நிலைய கட்டி முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எதிர்கால மக்கள் தொகை பெருக்கம், தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. விமான நிலையம் அமைக்க முதலீடு செய்யும் ரூ.100க்கு வருமானவாக ரூ.325 தமிழ்நாட்டுக்கு வருமானமாக கிடைக்கும். தமிழ்நாட்டுக்கு பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.
எனவே, ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை எட்ட இரண்டாவதி விமான நிலையம் அவசியம். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சரக்கு முனைய நெரிசல் காரணமாக பெங்களூரு விமான நிலையத்துக்கு சரக்கு செல்கிறது. தமிழ்நாட்டின் வாய்ப்புகளை ஐதராபாத் விமான நிலையமும் தட்டிப்பறிப்பதாக தமிழ்நாடு அரசு அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.