சென்னை: ஆரஞ்சு நிற பாக்கெட்டில் விற்கப்படும் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆவின் மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆவின் பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நவ.5-ம் தேதி (இன்று) முதல் பசும்பால் லிட்டர் ரூ.32-ல் இருந்து ரூ.35-ஆகவும், எருமைப்பால் ரூ.41-லிருந்து ரூ.44-ஆகவும் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும்.
இதனால் ஏற்படும் கூடுதல் செலவை ஈடுசெய்ய, விற்பனை விலையையும் உயர்த்த வேண்டி உள்ளது. எனினும், நுகர்வோர் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிற பாக்கெட்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிற பாக்கெட்) விலையில் மாற்றம் எதுவுமில்லை. அதேபோல, நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.46-க்கே புதுப்பிக்கப்படும். சில்லறை விற்பனையில் நிறைகொழுப்பு பால் (ஆரஞ்சு நிற பாக்கெட்) விலை நவ. 5 முதல் (இன்று) லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டு, ரூ.60-ஆக மாற்றியமைக்கப்படுகிறது.
எனினும், விலை மாற்றத்துக்குப் பின்னரும், தனியார் பால் விலையுடன் ஒப்பிடும்போது (அட்டைதாரர்களுக்கு) லிட்டருக்கு ரூ.24 குறைவாகும். சில்லறை விலை விற்பனையிலும் ரூ.10 குறைவாகும். உற்பத்தியாளர்கள் நலன் கருதி விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பால்வளத் துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பால் உற்பத்தியாளர்கள் முதல்வரிடம் வைத்த கோரிக்கை அடிப்படையில், கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. விற்பனை விலை உயர்வு சாதாரண மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. வணிக ரீதியிலான ஆரஞ்சு நிற பாக்கெட் பாலுக்கு மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. தனியாரை விட விலை குறைவுதான்.
பாஜக ஆளும் குஜராத், கர்நாடகாவைக் காட்டிலும் ரூ.10 குறைவாகவே வணிக ரீதியிலான பால் விற்கப்படுகிறது. ஏற்கெனவே 11 லட்சம் பேர் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். பால் அட்டை மூலம் 40 சதவீதம் பேரும், வணிகரீதியில் 60 சதவீதம் பேரும் வாங்குகின்றனர். அட்டை இல்லாமல் வணிக ரீதியாக வாங்குவோருக்கு மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பால் விலையை ரூ.3 குறைத்ததால், ரூ.270 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளதால், மாதம் ரூ.36 கோடி கூடுதல் இழப்பு ஏற்பட்டு, ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ரூ.702 கோடி இழப்பு ஏற்படும்” என்றார்.