திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகிலிருக்கும் வெலக்கல்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஜங்களாபுரத்தைச் சேர்ந்த 54 வயதாகும் இளவரசன் என்பவர் தமிழ் பாட ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவர் காலை நேரத்திலேயே, அடிக்கடி மதுபோதையில் பள்ளிக்கு வந்து பாடம் எடுக்காமல் மல்லாந்து தூங்கியிருக்கிறார். சில நேரங்களில், போதையில் ஏடாகூடமாக பாடம் எடுப்பதுடன் மாணவ, மாணவிகளையும் ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் கூறவே, விவகாரம் கல்வித்துறை அதிகாரிகளின் காதுகளுக்கும் எட்டியது. அதிகாரிகள் கண்டித்தபோதும், ஆசிரியர் இளவரசன் திருந்தவில்லையாம். கடந்த 2 நாள்களுக்கு முன்பும்கூட வகுப்பறைக்குள் போதையில் தடுமாறியபடியே ஓவர் அலப்பறை செய்திருக்கிறார்.
மாணவர்கள் தரப்பிலிருந்து மீண்டும் புகார்ச் செல்லவே, திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், பள்ளியில் விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ) ராஜா அண்ணாமலைக்கு உத்தரவிட்டார். அதன்படி, பள்ளிக்குச் சென்று டி.இ.ஓ விசாரணை நடத்தியதில், ஆசிரியர் இளவரசன் மதுபோதையில் இருந்தது உறுதியானது. இதையடுத்து, ஆசிரியர் இளவரசன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி தலைமை ஆசிரியை அமுதா தரப்பிலும் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. டி.இ.ஓ கொடுத்த அறிக்கையை வைத்து, ஆசிரியர் இளவரசனை தற்காலிகப் பணியிடை நீக்கமும் செய்திருக்கிறார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார்.