சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில், இந்தியாவின் முதல் வாக்காளரான 106 வயது முதியவர் உடல்நலக்குறைவால் காலமானார்.
ஹிமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல் வரும் நவ.,12ம் தேதி துவங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.ஹிமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் டிச., 8ம் தேதி நடைபெறும்.
இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட 1.22 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்கை செலுத்துகின்றனர்.
100 வயது கடந்த 1,190 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான கின்னார் மாவட்டத்தில் வசிக்கும் 106 வயதுடைய ஷியாம் சரண் நெகி என்ற முதியவர் கடந்த நவ., 2ம் தேதி தனது தபால் வாக்கை அளித்தார். இந்நிலையில், இந்தியாவின் முதல் வாக்காளரான 106 வயதான ஷியாம் சரண் நேகி கல்பாவில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று(நவ.,05) காலை காலமானார்.
ஹிம்மாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குர் இரங்கல்: இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் இரங்கல்:
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட இரங்கல் செய்தி: இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகியின் மறைவுக்கு தேர்தல் ஆணையம் இரங்கல் தெரிவிக்கிறது. இவர் இந்தியாவின் முதல் வாக்காளர் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர். தேசத்திற்கான அவரது சேவை அளவுக்கு அதிகமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement