கோவை: கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற கார்குண்டு வெடிப்பு சம்பவத்தில், பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபின் ஐஎஸ் அமைப்பு பற்றாளராக இருந்தது தெரிய வந்துள்ள நிலையில், மேலும் 50 ஐஎஸ்எஸ் பயங்கரவாத அமைப்புமீது பற்றுகொண்ட இளைஞர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கோவை உள்பட தமிழ்நாடு முழுவதும் வெடிகுண்டு வெடிக்கச்செய்து பதற்றத்தை ஏற்படுத்த முனைந்த, ஜமேசா முபின், கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுதொடர்பான விசாரணையை என்ஐஏ கையில் எடுத்துள்ள நிலையில், தினசரி பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. முபின் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கோவை உள்பட பல இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்ட சதியும் முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்பது குறித்தும் விசலாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், கோவை மாவட்டம் முழுவதும் 50 இளைஞர்கள் ஐ.எஸ். இயக்கத்தின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இவர்களை அடையாளம் கண்டுள்ள உளவுத்துறை போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக சிறப்பு பயிற்சிகள் வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவையில் கார் வெடிப்பு நிகழ்ந்த பிறகு நடத்தப்பட்டு வரும் விசாரணையில், மாவட்டம் முழுவதும் மேலும் 50 வாலிபர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களுக்கு உலமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலமாக நல்வழி பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக பிரத்யேகமாக ஒரு திட்டத்தையும் தொடங்க உள்ளோம் என்று கூறி உள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கருத்துக்களால், ஈர்க்கப்பட்டுள்ள அந்த இளைஞர்கள், தவறான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு நல்ல கருத்துக்களை போதித்து, அவர்களை நல்ல ஒரு குடிமகனாக மாற்றும் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.
இதன் காரணமாக, கோவை, பயங்கரவாத அமைப்புகளின் கூடாரமாக மாறி வருவது தெரியவந்துள்ளது. இதை காவல்துறையினர் முழுமையாக ஆராய்ந்து, இளைஞர்களை நல்வழிப்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும், காவல்துறையினரின் 3வது கண் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கோவையில் கார் குண்டு வெடிப்பு நிகழ்த்திய முபின் ஐ.எஸ். பயங்கரவாதி! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்…